தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாக மாறியுள்ளது. இதுவரை சுமார் 800-க்கும் மேற்பட்ட மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை ஆயிரக்கணக்கான மீனவர்களை கைது செய்து தாக்கியதில் பலர் காயமடைந்தும் நூற்றுக்கணக்கான படகுகளை இழந்தும் நிர்கதியாய் நிற்கிறார்கள்.
இந்த நிலையில் இலங்கை கடற்படை தற்போது 5 படகுகளில் சென்ற 24 மீனவர்களையும் படகுகளையும் சிறைப்படுத்தி வைத்துள்ளது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து கடந்த 28ம் தேதி 92 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் 5 படகுகளில் சென்ற 24 மீனவர்களையும், படகுகளையும் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த தகவல் பரவியதும் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க வேண்டும். தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதையும் சிறைபிடிப்பதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெகதாப்பட்டனம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் கிழக்கு கடற்கரை சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உடனே மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கவில்லை என்றால் 13 மாவட்ட மீனவர்களையும் இணைத்து பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவ பெண்கள் சாலையில் கதறி அழுது உருண்டு வந்த காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.