Skip to main content

’ஆதாரம் என்னிடத்தில் இருக்கின்றது. அவை அமைச்சரிடமும் இருக்கும் என்று நான் நம்புகின்றேன்’ - ஸ்டாலின்

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

 

s

 

இன்று (04-01-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் , சட்டமன்றத்தில் விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பிரச்னை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து, விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டுமென வலியுறுத்திப் பேசினார். அதேபோல, கஜா புயல் பாதித்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் வங்கிகளில் வாங்கியிருக்கின்ற விவசாயக் கடன், மாணவர்களின் கல்விக் கடன், மகளிரின் சுய உதவிக்குழு கடன் ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினார். அதன் முழுவிவரம் பின்வருமாறு:

 

 ’’விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பது சம்பந்தமான பிரச்னை குறித்து ஒரு அவசரமான கவன ஈர்ப்பை நான் அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் எடுத்து வைக்க விரும்புகிறேன். கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற 13 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைக்கின்ற காரணத்தால், ஏற்கனவே 2018 மே 6-ம் தேதியிலிருந்து சுமார் 7 மாதங்களாக அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். பவர் கிரிட் நிறுவனமும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் விவசயிகளிடத்தில் கேட்காமல் இந்த உயர்மின் கோபுரங்களை அமைக்கக்கூடிய பணிகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 40க்கு 90 மீட்டர் அகலத்தில் மின்பாதை அமைக்கின்ற காரணத்தால் 1 ஏக்கர் அல்லது 2 ஏக்கர் வைத்துள்ள 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, நிலம் எடுப்பதற்கு போதிய இழப்பீடு தொகையும் வழங்குவதில்லை. கடந்த காலங்களில் நிறுவப்பட்டிருக்கக்கூடிய உயர்மின் கோபுரங்களுக்கும் மாதாந்திர வாடகையும் வழங்க முடியாத நிலை. எனவே, அந்த விவசாய நிலம் எதற்கும் பயன்படுத்த முடியாத நிலையில் விவசாயப் பெருங்குடி மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது ஒரு வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கின்றது.

 

ஏற்கனவே, 13 மாவட்டங்களில் 200 க்கும் மேற்பட்டிருக்கக்கூடிய ஆலோசனைக் கூட்டங்களும், 16க்கும் மேற்பட்டிருக்கக்கூடிய ஆர்ப்பாட்டங்களிலும் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு, அதன்பிறகு தொடர்ச்சியாக சென்னையில் போராடக்கூடிய நிலை வந்திருக்கின்றது. சென்னையில் நேற்றைய தினம் போராடியவர்களை இந்த அரசு கைது செய்து சென்னையில் சிந்தாதிரிப்பேட்டையில் இரண்டு திருமண மண்டபங்களில் அவர்கள் வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

 

இன்று காலையில் நான், எங்களுடைய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் அவர்கள், கழக சட்டமன்ற உறுப்பினரகள் எல்லோரும் நேரடியாகச் சென்று அவர்களை எல்லாம் பார்த்து விட்டுத்தான் வந்தோம். பெண்கள் என்றும் கூட பாராமல் அவர்களை இரவில் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருப்பதென்பது மனித உரிமை மீறிய செயலாக அமைந்திருக்கிறது என்று நான் கருதுகின்றேன். ஆகவே, உடனடியாக அவர்களை இந்த அரசு விடுதலை செய்ய வேண்டும்.

 

நேற்றைய தினம் மின் துறை அமைச்சர், அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்கள். அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். பேச்சுவார்த்தையில் உடன்பாடு வரவில்லை. இன்றைக்கு நாங்கள் அவர்களை சந்தித்த நேரத்தில் அவர்கள் வைத்த கோரிக்கை முதலமைச்சர் எங்களை அழைத்து பேசிடவேண்டும் என்று. குறிப்பாக விவசாயிகளுடைய கோரிக்கை என்னவென்று கேட்டீர்கள் என்றால், இந்தத் திட்டத்தை பூமிக்கடியில் கேபிள் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற அந்தக் கோரிக்கையை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதை நீங்கள் பரிசீலிக்க வேண்டும். இதை நான் சொல்லுகின்ற போது துறையினுடைய அமைச்சர் விளக்கம் சொல்லலாம். கேபிள் வழியாக மின் தடங்களை கொண்டுசெல்வது சாத்தியமில்லை என்று சொல்லலாம், நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் சென்னையைச் சுற்றியிருக்கக்கூடிய பகுதிகளில்கூட 400 கி.மீ துணை மின் நிலையங்கள் இணைக்கக்கூடிய வகையில் 110 கி.மீட்டருக்கு 400 கி.வாட் அளவுள்ள கேபிளை சாலை ஓரமாக அமைத்திட தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஒப்பந்தப் புள்ளிகளை கோரியிருக்கின்றது. அதற்கான ஆதாரம் என்னிடத்தில் இருக்கின்றது. அவை அமைச்சரிடமும் இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

 

அதேபோல், பவர் கிரிட் நிறுவனம் கேரளாவில் 40 கி.மீ நீளத்திற்கு 325 கி.வாட் திட்டத்தை தற்போது கேபிள் வழியாக அங்கே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஏன்? நம்முடைய தமிழ்நாட்டில் மதுரையிலிருந்து இலங்கை புதிய அனுராதபுரத்திற்கு 525 கி.வாட் திட்டத்தை கடல் பகுதியில் கேபிள் அமைத்துக் கொண்டு செயல்படுத்துவதற்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பக்கத்து மாநிலங்களில் கூட பார்க்கின்றோம். உதாரணமாக சத்தீஸ்கர் மாநிலம் இராய்கார் முதல் புகளூர் வரை 800 கி.வாட் திட்டதை ABB நிறுவனம் புதிய கேபிள் தொழில் நுட்பம் மூலமாக செய்து வருகின்றது. அதுமட்டுமல்ல, கேபிள் மூலம் மின்சாரத்தை எடுத்துச் செல்லுகின்ற காரணத்தால் 10% மின் இழப்பு சேமிக்கப்படுகின்றது. இதனால் ஆண்டுக்கு சுமார் 42,000 கோடி ரூபாய் இழப்பும் தவிர்க்கப்படும் என்ற புள்ளிவிவரம் சொல்லுகின்றது. ஆகவே, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் 400 கி.வாட் 800 கி.வாட் திட்டத்தை கேபிள் வழியாக நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றோம் என்பது தான் என்னுடைய கேள்வி. மனமிருந்தால் மார்க்கமுண்டு, ஆனால் நீங்கள் பணமிருந்தால்….. என்பதுபோல தான் சொல்லுவீர்கள். இருந்தாலும் நான் முதலமைச்சரையும் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய அமைச்சரையும் நான் கேட்டுக்கொள்வது, இந்தப் பணிகளையெல்லாம் உடனடியாக நிறுத்தி சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய விவசாயிகளை அழைத்துப்பேசி ஒரு சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தி கேபிள் வழியாக கொண்டு செல்லக்கூடிய அந்தத் திட்டத்தை இந்த அரசு தீவிரமான வகையில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டு அமர்கின்றேன்.

 
கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகள் வங்கிகளில் வாங்கியிருக்கக்கூடிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றார்கள். நானும் அதைத்தான் வலியுறுத்துகின்றேன், வற்புறுத்துகின்றேன். தேசிய மயமாக்கப்பட்டிருக்கக்கூடிய வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கக்கூடிய கடனை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த அரசு தள்ளுபடி செய்வதற்கு முன்வர வேண்டும். விவசாயிகளின் கடன் மட்டுமல்ல, மாணவர்கள் தங்களுடைய கல்விக்காக வங்கிகளில் வாங்கியிருக்கக்கூடிய கடன் – பெண்கள் மகளிர் சுய உதவிக்குழுவிற்காக வாங்கியிருக்கக்கூடிய கடன் – நம்முடைய மீனவச் சமுதாயத்தைச் சார்ந்திருக்கக் கூடியவர்கள் படகுகளுக்காக வாங்கியிருக்கக்கூடிய அந்தக் கடன் என இந்தக் கடன்களை முழுமையாக இந்த அரசு ரத்து செய்வதற்கு முன்வர வேண்டும். முதலமைச்சர் அவர்கள் இங்கே பதிலுரை வழங்க இருக்கின்றார்கள். இந்தப் பிரச்னை குறித்து நிச்சயமாக பதில் சொல்லுவார் என்று நான் எதிர்பார்க்கின்றேன், எதிர்பார்க்கின்றேன் என்பது மட்டுமல்ல நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். அவர் வழங்குவார் என்ற நம்பிக்கையோடு இந்தக் கோரிக்கையை நான் எடுத்து வைக்கின்றேன்.

 

மின் துறை அமைச்சர் அவர்கள் நீண்ட விளக்கத்தைத் தந்திருக்கின்றார்கள். நான் கேட்கின்ற ஒரு சந்தேகம், இந்தத் திட்டத்தைப் பொறுத்த வரையில் திராவிட முன்னேற்றக் கழகம் மனப்பூர்வமாக வரவேற்கின்றது அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது, அதற்கு நீங்கள் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், 800 கி.வாட் திட்டத்தை கேபிள் வழியாக கொண்டுவர முடியாது அது சாத்தியமில்லை என்று நீங்கள் தெளிவாக சொல்கின்றீர்கள், அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். 800 கி.வாட் திட்டத்தை இரண்டாகப் பிரித்து எப்படி கேரளாவில் 325 கி.வாட் கொண்டு வருகின்றார்களோ அதேபோல் இங்கே 400 – 400 கி.வாட் ஆக பிரித்து கொண்டுவர வாய்ப்பு இருக்கின்றதா? அது சாத்தியப்படுமா? என்பதை தங்கள் மூலமாக கேட்டுக்கொள்கின்றேன்.’’

சார்ந்த செய்திகள்