Skip to main content

தந்தையின் நண்பரைக் கொன்ற மகன்; திருப்பூரில் பரபரப்பு - மூன்று மாதத்தில் நடந்தது என்ன?

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Son incident father's friend in Tirupur

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு அருகே அமைந்துள்ளது ராயன் கோயில் காலனி. இங்குள்ள 4வது வீதியில் வசித்து வருபவர் லட்சுமணன். 35 வயதான இவர், தென்காசி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். லட்சுமணன், அவிநாசி பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி கங்கா. இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகனும், மகளும் உள்ளனர். 

 

இந்நிலையில், லட்சுமணனுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நிறுவனத்தில் ஆர்டர் எடுக்கும்போது, அங்கு வேலை செய்த திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக மாறிய இவர்கள் அடிக்கடி சந்தித்து வந்தனர். இதற்கிடையில், யுவராஜ் குடிநீர் கம்பனியில் செய்துவந்த வேலையை விட்டுவிட்டு அவிநாசிக்கு அருகே உள்ள தனியார் கம்பனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.  ஆனால், யுவராஜ் வசிப்பதற்கு நிலையான இடம் இல்லாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, இதையறிந்த லட்சுமணன் யுவராஜை கடந்த மூன்று மாதங்களாக தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருக்கிறார். அதன்பிறகு, லட்சுமணனும் யுவராஜூம் இணைந்து குடிநீர் கேன் விநியோகிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர். அந்த சமயம், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லட்சுமணன் தான் குடியிருக்கும் வீட்டிற்கு அருகிலேயே  வள்ளியம்மாள் என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் யுவராஜை தனியாக தங்கவைத்திருக்கிறார். இத்தகைய சூழலில், கடந்த 6ஆம் தேதியன்று யுவராஜ் தங்கியிருந்த வீடு பூட்டியே இருந்துள்ளது. அவர் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் வள்ளியம்மாள் அந்த ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த யுவராஜ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். அதன்பிறகு, அந்த இடத்தில் குவிந்த பொதுமக்களின் உதவியுடன் அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த யுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், யுவராஜை கொலை செய்தது யார்? எதற்காக செய்தார்கள் அல்லது ஏதேனும் முன்விரோதமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கொலையாளியைக் கண்டுபிடிப்பதற்காக மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த மோப்ப நாய் யுவராஜ் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது நண்பரான லட்சுமணனின் வீட்டையே சுற்றி வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீஸ் டீம், லட்சுமணனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். 

 

போலீசாரின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு தாக்கு பிடிக்க முடியாத லட்சுமணன் பல்வேறு உண்மைகளைத் தெரிவித்தார். அவர் சொன்ன தகவலின் படி சம்பவத்தன்று லட்சுமணனின் மகன் ரத்த கரையுடன் வீட்டுக்குள் வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமணன் தனது மகனிடம் நடந்த விஷயங்களை கேட்கும்போது தான் யுவராஜை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து, என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப்போன லட்சுமணன் மனைவி கங்கா, மகன் மற்றும் மகள் ஆகியோரை தென்காசிக்கு பஸ்ஸில் அனுப்பி வைத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, லட்சுமணனின் மகன் தென்காசி நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த கொலை சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமணன் வீட்டில் யுவராஜ் தங்கியிருந்த மூன்று மாதத்தில் அவர்களுக்குள் என்ன பிரச்சனை நடந்தது? எதற்காக லட்சுமணனின் மகன் யுவராஜை கொல்ல வேண்டும் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது, தந்தையின் நண்பரை மகனே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் திருப்பூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்