Skip to main content

“பிச்சை எடுத்தாவது பணம் தருகிறேன்..” - மக்களின் அடிப்படை வசதிக்காக பேசிய கவுன்சிலர்

Published on 30/07/2022 | Edited on 30/07/2022

 

Seerkazhi Counselor spoke for public goes viral

 

"நகராட்சியில் அடிப்படை பணிகள் ஏதுவுமே நடக்கவில்லை. தான் பிச்சை எடுத்தாவது பணம் தருகிறேன்; அந்த பணத்திலாவது அடிப்படைவசதிகளை செய்து கொடுங்க” என சீர்காழி நகர்மன்ற கூட்டத்தில் வார்டு கவுன்சிலர் ஒருவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக் கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சீர்காழி நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆணையர் ராஜகோபால், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் முன்வைத்து அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

 

Seerkazhi Counselor spoke for public goes viral

 

சில வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி சார்பில் செய்யப்பட வேண்டிய எந்த ஒரு அடிப்படை வசதிகளும் சீர்காழி நகராட்சி சார்பில் செய்யப்படுவதில்லை என்று குற்றச்சாட்டை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய தே.மு.தி.கவைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் ராஜசேகர், "நகராட்சியில் மண்வெட்டி வாங்குவதற்காக 10 லட்சம் ரூபாய் டெண்டர் விடப்பட்டது. ஆனால் மண்வெட்டி கம்பு கூட, வாங்கவில்லை, அதேபோன்று டெங்கு பரவலை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிப்பதற்கும் பல லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுநாள் வரை ஒரு வாரத்திற்கு கூட கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெறவில்லை. 


குடிநீர் வழங்கும் நீர்நிலை தொட்டிகள் சுத்தம் செய்வதில்லை, கடைசியாக எப்போது சுத்தம் செய்தீர்கள் என அதிகாரிகளிடம் கேட்டால் அவர்களிடம் பதில் கிடையாது. தூய்மை பணியாளர்களுக்கு மண்வெட்டி, அருவாள், கையுறை உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் வாங்கி தர வேண்டும். நகராட்சியில் பணம் இல்லை என்றால் தே.மு.தி.க சார்பில் நான் பிச்சை எடுத்து பணம் தருகிறேன். ஆக்கப்பூர்வமான அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் மழை பெய்யும் சூழலில் குளங்களை தோண்டுவது சரியான செயல் அல்ல” என்றார்.

 
நகராட்சி நிர்வாக சீர்கேடுகள் குறித்தும், அதிகாரிகள் குறித்தும் பல்வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்பிய நிலையில், செய்தியாளர்கள் செய்தி எடுக்க அனுமதி இல்லை என கூறி செய்தியாளர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்