Skip to main content

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு அறிவியல் உலகத்திற்கும், அறிவு உலகத்தவர்களுக்கும் துன்பம் தரும் பெரும் செய்தி: கி.வீரமணி

Published on 14/03/2018 | Edited on 14/03/2018

 

/Scientist-Stephen-Hawking




பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். 
 

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 
 

உலகம் போற்றும் வியத்தகு விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) அவர்கள் இன்று (14.3.2018) காலமானார் என்ற செய்தி அறிவியல் உலகத்திற்கும், அறிவு உலகத்தவர்களுக்கும் மிகவும் துன்பம் தரும் பெரும் செய்தியாகும்!
 

அவரது வாழ்வே பல விந்தைகளை உள்ளடக்கிய வாழ்க்கையாகும்!

சில மாதங்கள்கூட உயிருடன் இருக்கமாட்டார் என்று மருத்துவர்களால் கூறப்பட்ட அவரது வாழ்வு, இவ்வளவு காலம்வரை நீண்டதனால் மனித குலம், அறிவியல் ஆராய்ச்சித் துறை பெற்ற நன்மைகள் - சமூக நலன்கள் ஏராளம்! ஏராளம்!!
 

அத்துணை ஆபத்தான ‘விசித்திர’ நோய் பாதிப்பினால் முடக்கப்பட்டு, சக்கர நாற்காலி வாழ்வினராகி, மணமுடித்து, குழந்தை பெற்ற வாழ்க்கையை வாழ்ந்தவர். அறிவியல் - மருத்துவவியலின் வியக்கத்தகுந்த வளர்ச்சியினால் கிடைத்த விழுமிய பயன் எத்தகையது என்பதை உலகுக்கு நீண்ட அவரது வாழ்வும், ஆயுளும் புகட்டின!
 

உலகம் என்பது படைக்கப்பட்டதல்ல என்ற அறிவியல் கருத்தின் அடிப்படையில் பரிணாம வளர்ச்சி மாற்றங்கள்மூலம் நிகழ்ந்ததன் விளைவு என்று எழுதிய அவர், முதலில் பெருவெடிப்பு (Big Bang) என்ற தத்துவத்தின் அடிப்படையில் உலகம் வளர்ந்து கிளைத்தது என்று கூறி,  பிறகு ‘கடவுள்’ என்பதே கற்பனை என்பதை நான் முழுமையாக ஏற்பதோடு, கடவுள் நம்பிக்கை அறிவியலின் அடிப்படையில் ஆதாரமற்றது என்று தானும், மற்றொரு ஆய்வாளரும் இணைந்து எழுதிய ‘தி கிராண்ட் டிசைன்’ (The Grand Design) என்ற நூலில் தெளிவாக எழுதினார்.
 

76 வயது வரை வாழ்ந்த அவரது வாழ்வு, எண்ணற்ற ஆய்வுகள் உலகுக்கும், எதிர்கால அறிவியல் தளத்திற்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்படக் கூடியவை; அவர் தனது பாரம்பரிய ஆய்வுச் செல்வங்களை விட்டுவிட்டு (Legacy) விடை பெற்றுள்ளார்.
 

அவருக்கு நமது வீர வணக்கம்!
 

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அறிவியல் உலகக் குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்டீபன் ஹாக்கிங் நமக்கு என்ன செய்திருக்கிறார்?

Published on 14/03/2018 | Edited on 14/03/2018

தன் 21-வது வயதிலேயே அமையோட்ரோபிக் லேட்டரால் ஸ்க்லரோசிஸ் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், குணப்படுத்தமுடியாத இந்த நோயினால் தன் கால், கை, பாதிக்கப்பட்டு இறுதியில் பேச்சையும் இழந்தார். கம்ப்யூட்டர் தொகுப்பு மூலமாக  மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் இவருடைய முயற்சியும், இயற்பியலுக்கு இவரின் பங்களிப்பும் சற்றும் குறையவில்லை. அப்படியொரு முயற்சியும் வீரியமும் கொண்டவர் ஹாக்கிங்.

 

hawking

 

1986-ஆம் ஆண்டு அனேன்பெர்க் அறக்கட்டளை, இயற்பியல் பாடத்தை மாணவர்களுக்கு எளிய முறையில் பயிற்றுவிற்பதற்கான எளிய நடையில் உருவாக்க முடியுமா என்று கேட்டு, அப்படி உருவாக்கினால் 6 மில்லியன் டாலர் பரிசு என அறிவித்த பொழுது அதன் சவாலை ஏற்று அரை மணிநேரத்திற்கு ஒரு காட்சி என தொடர்ந்து 26 மணிநேரம் ஓடக்கூடிய ''காலம் ஒரு வரலாற்று சுருக்கம்'' என்ற பாடத்திட்டத்தை உருவாக்கி வெற்றிபெற்றார். அந்த பாடத்திட்டத்தை உலகத் தமிழ் அறக்கட்டளை 2000-ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழிபெயர்த்தது. தொடர்ந்து அவர் உருவாக்கிய ''காலம் - ஒரு சுருக்கமான வரலாறு'' என்ற பதிப்பு உலகம் முழுதும் விற்பனையாகி சாதனை படைத்தது. அன்று வரை இயற்பியல் என்றாலே கணிதம், சமன்பாடுகள் என இருந்த நிலையை மாற்றி  எளிமையான நடையில் படிக்கும் அனைவரும் புரிந்துகொள்ளும்வகையில் உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.
 

அண்டவியல் பற்றியும் குவாண்டம் ஈர்ப்பு பற்றிய ஆராய்ச்சி துறைகளின் இவருடைய பங்களிப்பு மிகவும் அளப்பரியது. கருந்துளைகள்(black holes)மற்றும் வெப்ப இயக்கவியல் பற்றியும் ஆய்வுக் கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார். கருந்துளைகளின் வழியாக ஒளி உட்பட எதுவுமே வெளியறே முடியாது என நம்பப்பட்ட கருத்துக்கு மாறாக கருந்துளையின் வழியே துணுக்கைகள்(particles) வெளியேறும் என நிரூபித்தார். அப்படி வெளியேறும் கதிர்வீச்சுக்கு ''ஹாக்கிங் கதிர்வீச்சு'' என்று அழைக்கப்படுகிறது. 
 

மேலும் பிபிசியின் ரித் உரையின் போது எதிர்கால அறிவியல் பற்றி அவர் சில கருத்துக்களையும், கொள்கைகளையும் கொடுத்தார். அவர் அண்மையில் இந்த உலகம் மனிதன் தானே உருவாக்கிய தொடர்ச்சியான ஆபத்துகளினால் அழிய வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளார். குறிப்பாக அணு ஆயுதப்போர், புவி வெப்பமாதல், மரபணு மாற்றப்பட்ட வைரஸ் போன்ற காரணிகளாலேயே இது நிகழும் எனவும் எச்சரித்தார். அறிவியல் தொழில்நுட்பத்தில் வரும் முன்னேற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் தவறாகிப் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது என அவர் நிகழ்த்திய உரை அறிவியல் உலகத்தையே  திரும்பிப் பார்க்க வைத்தது. வேறு உலகங்களில் மனிதன் குடியேறுவது சாத்தியமானால் இந்த அழிவில் இருந்து தப்பிப்பது சாத்தியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 

hawking

 

தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி அவர் கூறிய கருத்து மிகவும் உணர்ச்சிவசகரமானது. ''உயிரோடு இருப்பதும், கோட்பாட்டு ரீதியான இயற்பியல் துறையில் ஆய்வுகள் செய்வதும் என்னுடைய உன்னதமான காலம் என்றே சொல்வேன். முன்பு யாரும் கண்டிராத ஒரு விஷயத்தை நாம் முதன் முதலாக கண்டுபிடிக்கும் அந்த அற்புதமான தருணத்துடன் வேறுறொரு தருணத்தை ஒப்பிட்டு சொல்லவே முடியாது, அப்படியான தருணம் அது'' எனக் கூறியுள்ளார். 
 

அறிவியல் துறையில் முன்னேற்றங்களை நாம் நிறுத்த போவதில்லை, அதேபோல் அறிவியல் உலகில் பின்னோக்கி செல்லப்போவதும் இல்லை. ஆனால் அறிவியலில் எதிர்காலத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளை இன்றே இனங்கண்டு தடுக்க வேண்டும் என்ற பெரிய உண்மையை நெற்றிப் பொட்டில் அடித்தார் போல் சொல்லியவர் ஹாக்கிங். 
 

நான் நோய்வாய்ப்பட்டதால்தான் என் முழு சிந்தனையையும் வேறுஎந்த விஷயத்திலும் செலுத்தாமல் ஆராய்ச்சியில் செலுத்துகிறேன் என தனக்குள்ள குறைபாட்டைக்கூட மிகுதியின் பார்வையில் பார்த்தவர் ஹாக்கிங்.  மருத்துவர்கள் நரம்பியல் குறைபாடுகளினால் உங்கள் உடல் உறுப்புகள் செயலிழந்து வருகிறன்றன எனக்கூறுகையில் மூளை செயலிழக்கவில்லையே அது போதும் எனக்கூறி தன்னம்பிக்கையின் ஒட்டுமொத்த உருவமாக நின்றவர் ஸ்டீபன் ஹாக்கிங். எழுந்து நிற்கமுடியாத,பேசமுடியாத சூழலில் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு  பேரண்டத்தை பற்றியே ஆய்வுசெய்தார் என்றால் எப்படிப்பட்ட மனோபலம் அவருக்குள் இருந்திருக்க வேண்டுமென்று யோசித்தால்கூட யூகிக்க முடியாது. ''வாழ்க்கை கடினம்தான் ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது! '' என்ற தன்னபிக்கை வார்த்தைக்கு சொந்தக்காரர்.  
 

hawking

  

"எதிர்கால ஆய்வாளர்கள் விஞ்ஞானம் எப்படி உலகை மாற்றியமைக்கிறது என்பதை நன்கு புரிந்து வைத்துக்கொள்வது அவசியம். அதுமட்டுமின்றி பொதுமக்களும் அதை அறிந்துகொள்ள, புரிந்து கொள்ள உதவ வேண்டும்" என கூறியவர் ஹாக்கிங்.
 

இப்படி அறிவியலில் இயற்பியல் துறையின் பல பரிமாணங்களை, வியூகங்களை எளிய நடைமுறைக்கு கொண்டுவந்த ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் இழப்பு எந்த சமன்பாடுகளாலும் சமன்படுத்தமுடியாத, தீர்க்கப்படமுடியாத ஒன்று....