பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114வது ஜெயந்தி விழா மற்றும் 59வது குருபூஜை விழா நாளை (30/10/2021) ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் குருபூஜை விழாவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், குருபூஜையில் பங்கேற்க அரசியல் கட்சித் தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறையினரிடம் முன் அனுமதி பெற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் சசிகலா பங்கேற்க அனுமதி வழங்குமாறு, அதிமுகவைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார்.
இதையடுத்து, குருபூஜையில் பங்கேற்க சசிகலாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து, சசிகலா நேற்று (28/10/2021) மதியம் தஞ்சையிலிருந்து சாலை மார்க்கமாக திருச்சி வழியாக மதுரைக்குச் சென்றவர், தனியார் விடுதியில் தங்கினார். பின்னர், இன்று (29/10/2021) காலை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக, தெப்பக்குளம் சந்திப்பில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.
பின்பு, பசும்பொன் கிராமத்துக்குச் சென்றுள்ள சசிகலா, முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்திய வாகனத்தையே சசிகலா தற்போதைய சுற்றுப்பயணத்தில் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.