Skip to main content

மணல் கொள்ளை சம்பவங்களும்;தாக்குதல்களும்-போலீசார் விசாரணை

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

Sand Robbery Incidents; Assaults - Police Investigation

 

மணல் கடத்தலை தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ளது நரிங்கியப்பட்டு எனும் கிராமம். இந்தப் பகுதியில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக வெளியான தகவலையடுத்து அம்புகோவில் கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின், அவரது உதவியாளர் பைங்கிளி மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்றனர். அப்பொழுது அறிவழகன், விக்கி உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பல் சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின், உதவியாளர் பைங்கிளி மற்றும் காவல்துறையினரைக் கடுமையாகத் தாக்கினர். பின்னர் அள்ளிய மணலை அங்கேயே கொட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், விக்கி என்ற நபரை முதலில் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய மற்ற ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Sand Robbery Incidents; Assaults - Police Investigation

 

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மணற்கொள்ளை குறித்து சுவரொட்டி ஒட்டிய சம்பவத்தில் ஏற்பட்ட மோதலால் பரபரப்பானது. செஞ்சி அருகே உள்ள மீனம்பூர் கிராமத்தின் ஊராட்சிமன்ற தலைவர் அந்தப் பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், ஏரி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாகவும் செஞ்சியில் உள்ள அரசு அலுவலகங்களின் சுவர்கள் மற்றும் மருத்துவமனை சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பரபரப்பை  ஏற்படுத்தியது. தனக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டிய மீனம்பூர் கிராமத்தைச் சேர்ந்த நபர்களை ஊராட்சி மன்ற தலைவரின் மகன் உள்ளிட்ட சிலர் கடுமையாகத் தாக்கினர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. இந்தப் புகாரின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவர், அவரது சகோதரர் மற்றும் மகன் என மொத்தம் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்