Skip to main content

தண்ணீரின்றி தவிக்கும் சம்பா நெல் பயிர்; கூடுதல் தண்ணீர் திறப்பை எதிர்பார்க்கும் விவசாயிகள்

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Samba rice crop suffering from lack of water; Farmers expect to open additional water


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் தண்ணீரின்றி  சம்பா நெல் பயிர் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்களைக் காத்திட வீராணம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.

பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள பி.முட்லூர், அகரம், பெரியகுமட்டி, அரியகோஷ்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் சம்பா நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு செய்யப்பட்டு பயிர் நன்றாக வளர்ந்துள்ளது.

இது வீராணம் ஏரி பாசனத்தின் கடைமடை பகுதியாகும். தற்போது பயிர் பால் பருவ கதிர் வரும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இப்பகுதிக்கு பாசனத்துக்கு தண்ணீர் வரும் அரியகோஷ்டி வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் நிலையில் ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த சிறிய அளவிலான மழையால் பயிர் தப்பியுள்ளது. இந்த நிலையில் அப்பகுதி விவசாயிகள் சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து வீராணம் ஏரியில் இருந்து அரியகோஷ்டி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்த அளவு உள்ள நிலையில் கடந்த 21ம் தேதி அரியகோஷ்டி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலில் 22 கி மீ தூரம் கடந்து பரங்கிப்பேட்டை பகுதியான அரியகோஷ்டி, அகரம் ஆகிய கிராம வயல்களை கடந்து வரவேண்டும். ஆனால் தண்ணீர் வரும் வழியில் விவசாயிகள் தண்ணீரை தடுத்து கொண்டம் அமைத்து பாசனம் செய்து வருவதால் கடைமடை பகுதி வரை பாசனத்துக்கு தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடைமடை பகுதியில் உள்ள சம்பா நெல் பயிர் பால் கதிர் வரும் நிலையில் கருகி காய்ந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைமடை பகுதிக்கு பாசனத்துக்கு தண்ணீர் வராததால் என்ன செய்துவது என்று தெரியாமல் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வீராணம் ஏரியில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அப்பகுதி விவசாயிகள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கரிகாலசோழன் அரிய கோஷ்டி வாய்க்கால் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் சிதம்பரம் சார்- ஆட்சியரை சந்தித்து வீராணம் ஏரியில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை பாசனத்திற்கு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'நாங்கள் கடைமடை பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். இந்த ஆண்டு மேட்டூரில் தண்ணீர் இல்லாததால் பாசன வாய்க்காலில் வந்த குறைந்தளவு தண்ணீரை வைத்து நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவும் செய்யப்பட்டது. ஏக்கருக்கு ரூ 25 ஆயிரத்து மேல் கடன் வாங்கி செலவு செய்துள்ளோம். ஆனால் தண்ணீர் இல்லாமல் எங்கள் பயிர் காய்ந்து வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன் வயலில் உரம் போட்டுள்ளோம். அந்த உரம் தண்ணீரில் கரைவதற்கு தண்ணீர் இல்லாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் வயலில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்டாண்டாக நாங்கள் விவசாயத்தை செய்து வருகிறோம். வீராணம் ஏரியில் இருந்து அரியகோஷ்டி வாய்க்காலுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்தால் தான் அது கடைமடை வரை பாசனத்திற்கு வரும். எனவே அரிய கோஷ்டி வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாய்க்காலில் வரும் தண்ணீரை மறித்து கொண்டம் கட்டுவதையும் வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏரியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ள நிலையில் நீர் வளத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு கிராமத்துக்கும் முறை வைத்து தண்ணீர் திறக்க வேண்டும்' என்கின்றனர்.

சார்ந்த செய்திகள்