Skip to main content

சேலம் எஸ்ஐ 6 லட்சம் 'லபக்'; விரக்தியில் வாலிபர் போலீசார் முன்பு விஷம் குடிப்பு!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020


சேலத்தை அடுத்த அல்லிக்குட்டையைச் சேர்ந்தவர் சதீஷ் (35). கடந்த சில ஆண்டுக்கு முன்பு, வீராணம் காவல் நிலையத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றி வந்தார்.

 

 

salem youth incident hospital police si

அப்போது சதீஷூக்கும், அந்த காவல் நிலையத்தில் போலீஸ் எஸ்ஐ ஆக பணியாற்றி வந்த சத்தியமூர்த்தி என்பவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் அடிப்படையில் சதீஷிடம் இருந்து அவசர தேவைகள் இருப்பதாகக் கூறி எஸ்ஐ பணம் வாங்கி உள்ளார். சில தவணைகளாக இந்தப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 லட்சம் ரூபாய் வரை சதீஷ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, ஒரு விபத்தில் சிக்கிய எஸ்ஐ சத்தியமூர்த்தி, தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். பின்னர் அவர் வீராணம் காவல் நிலையத்தில் இருந்து சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

 

அவரை சந்தித்த சதீஷ், தான் கொடுத்த 6 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு எஸ்ஐ, நான் பணமே வாங்காதபோது உனக்கு எதற்கு தர வேண்டும்? எனக்கேட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ், பலமுறை அவரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டு அணுகியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

 

இதுகுறித்து சதீஷ், சேலம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 07.00 மணியளவில் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்த சதீஷ், எஸ்ஐ சத்தியமூர்த்தியை பார்க்க முயற்சித்துள்ளார். அப்போது பணியில் இருந்த காவலர்கள், வருகைப்பதிவேடு பணிகள் நடப்பதால் பிறகு வாருங்கள் எனக்கூறியுள்ளனர்.

 

பின்னர் காவல் நிலையத்திற்கு வெளியே சதீஷ் காத்திருந்தார். எஸ்ஐ சத்தியமூர்த்தி, காவலர்கள் சிலரும் அங்கு வந்தனர். அப்போது சதீஷ், என் பணத்தை தராமல் ஏமாத்திட்டீங்க. நான் சாகப்போகிறேன் என்று சொல்லியபடியே, தான் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து குடித்தார். அதிர்ச்சி அடைந்த காவலர்கள் அவரை மீட்டு, உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

காவல் நிலையம் அருகே போலீசார் முன்பே வாலிபர் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்