Skip to main content

சேலம்: கள்ளச்சாராய கும்பலுடன் தொடர்பு; தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் தூக்கியடிப்பு!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

salem district liquor police inspector


சேலம் மாவட்டத்தில், கரோனா ஊரடங்கால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், சாராயத்தைப் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதும் அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாகவே கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கையில் சேலம் மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், தீவட்டிப்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராய ஊறல் மற்றும் பாக்கெட் சாராயம் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதும், அக்காவல் நிலைய தனிப்பிரிவு சிறப்பு எஸ்ஐ பாபு, சாராய குற்றவாளிகளுடன் கைகோர்த்துச் செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது. இதுகுறித்து தமிழக டிஜிபி அலுவலகத்திற்கும் நேரடியாக புகார் சென்றது. 

இதையடுத்து, தனிப்பிரிவு எஸ்ஐ பாபுவை உடனடியாக மாவட்ட தீண்டாமை ஒழிப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்து டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டது. 

பெரும் விசுவரூபம் எடுத்த இவ்விவகாரம் குறித்து மாவட்ட எஸ்பி தீபா கனிகரும் நேரடியாக விசாரணையில் இறங்கினார். தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் முருகன், சிறப்பு எஸ்ஐ ஜானகிராமன், தலைமைக் காவலர்கள் முத்து, சவுந்தரராஜன், விஜயபாலன் ஆகியோரும் சாராய குற்றவாளிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததும், குறிப்பாக ஆய்வாளரின் ஆசியுடன்தான் தீவட்டிப்பட்டி காவல் சரகத்தில் பாக்கெட் சாராயம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுவதும் தெரிய வந்தது. 

இதுகுறித்த முழுமையான விசாரணை அறிக்கை சேலம் சரக டிஐஜி பிரதீப்குமாருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் முருகன் அதிரடியாகத் தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் இருந்து நீக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைத்து டிஐஜி உத்தரவிட்டார். 

http://onelink.to/nknapp


சிறப்பு எஸ்ஐ ஜானகிராமன் வாழப்பாடி காவல் நிலையத்திற்கும், தலைமைக் காவலர்கள் முத்து மல்லியக்கரைக்கும், சவுந்தரராஜன் காரிப்பட்டிக்கும், விஜயபாலன் ஆத்தூர் காவல்நிலையத்திற்கும் இடமாற்றம் செய்து எஸ்பி தீபா கனிகர் உத்தரவிட்டார். 

இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து ஓமலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், கூடுதலாகத் தீவட்டிப்பட்டி காவல் நிலைய பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். 

ஒருபுறம் சாராய குற்றவாளிகளை விடிய விடிய கண்காணித்து மாவட்ட காவல்துறையினர் கைது செய்கின்றனர். ஊறலைக் கைப்பற்றி அழிக்கின்றனர். மற்றொருபுறம் குற்றத்தையும் தடுக்காமல், சாராய குற்றவாளிகளுடன் கூட்டணி அமைத்து செயல்படும் காவல்துறையினரைப் பெயரளவுக்கு இடமாற்றம் செய்யாமல், பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்துகளும் நேர்மையான காவல்துறையினரிடையே எழுந்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்