கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள, நாகரசம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துவேல் (29). கூலித்தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சொத்து தகராறில் தனது தாய், சித்தி ஆகியோரை படுகொலை செய்தார்.
இதையடுத்து நாகரசம்பட்டி காவல்துறையினர் முத்துவேலை கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. சேலம் மத்திய சிறையில் 8வது கட்டடத் தொகுதியில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை (ஜன. 16) காலை 6 மணியளவில் சிறைக்குள் இருந்து வெளி வளாகத்திற்குள் வந்த முத்துவேல், திடீரென்று மாடிப்படி வழியாக விறுவிறுவென மேலே ஏறிச்சென்று, அங்கிருந்த ரேடியோ வயரை பிடித்துக் கொண்டு கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற கைதிகளும், சில காவலர்களும் அவரை உடனடியாக மீட்டனர். அடுத்த சிறிது நேரத்தில் முத்துவேல், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.
விசாரணையில், முத்துவேலுவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அவர் அடைக்கப்பட்டு இருந்த அறையில் மேலும் மூன்று கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள், ''சொத்துக்காக பெற்ற தாயையே கொலை செய்த உன்னை யாருடா ஜாமினில் எடுக்க வருவார்?. நீ ஆயுசுக்கும் சிறைக்குள்ளேயே கிடந்து சாக வேண்டியதுதான்,'' எனக் கூறியுள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்துதான் அவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவருக்கு மனநல ஆலோசனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினரும், சிறைத்துறையினரும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.