Skip to main content

பால் கொள்முதலில் ரூ.2 கோடி ஏமாற்றம்! மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த நிர்வாகிகள்...

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

Rs 2 crore disappointment after buying milk ...! Manufacturers' Association executives who have complaint with the District Collector ...

 

 

தேனி மாவட்டத்தில் உள்ள  ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து, உத்தமபாளையம் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பாண்டியராஜ் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ மீனாட்சி அக்ரோ புட்ஸ் டிரேடிங் என்ற நிறுவனத்துக்கு கொடுத்துள்ளனர். இப்படி வாங்கிய பாலுக்கு பாண்டியராஜ், பணம் கொடுக்காமல் ரூ.2 கோடியுடன் தலைமறைவாகிவிட்டார் என்று மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்விடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

 

இது தொடர்பாக குமணன் தொழு கிராமத்தைச் சேர்ந்த பாண்டி கூறும்போது, “கரோனா காலத்தில் பால் அதிக அளவில் தேக்கமடைந்தது. அப்போது எங்களை அணுகிய புலிக்குத்தியைச் சேர்ந்த பாண்டியராஜ் என்பவர், பாலை கொள்முதல் செய்வதாகவும், அதற்கு உரிய பணம் கொடுப்பதாகவும் கூறினார். நாங்களும், அவருடைய நிறுவனத்தை நேரில் சென்று பார்த்துவிட்டு, பாலை கொடுக்க ஆரம்பித்தோம். சில நாட்களில் பணம் தருவதாகக் கூறியவர் மாதக்கணக்கில் பணத்தைக் கொடுக்காமல் இருந்தார். கேட்டதற்கு, தனது நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்த கேரள வியாபாரிகள் இன்னும் பணம் கொடுக்கவில்லை என கூறினார். நாங்களும் ஆறு மாதம் வரை பொறுத்துப் பார்த்தோம். ஒரு நாள் நிறுவனத்துக்குப் பூட்டு போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். 

 

இது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒவ்வொரு பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கும் லட்சக் கணக்கில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. மொத்தம் 30 பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மட்டும் ரூ.2 கோடி பணம் தர வேண்டும். தலைமறைவாக உள்ள பாண்டியராஜைப் பிடித்து அவரிடம் இருந்து பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்” என்றார். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்