Skip to main content

ஜல சமாதி ஆவதற்குச் சென்னையிலிருந்து காசிக்குச் சென்ற பெண் மீட்பு ; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

Rescue of woman who went to Kashi from Chennai to become Jalasamati; Shocked by the police investigation

 

மகன் உயிரிழந்த சோகத்தைத் தாங்க முடியாத தாய் ஒருவர் கங்கையில் இறங்கி ஜல சமாதி ஆவதாக முடிவெடுத்து சென்னையிலிருந்து காசிக்குச் செல்ல முயன்ற நிலையில், அவர் நாக்பூரில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சி.எம்.சி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக சதீஷ் இருக்கிறார். இவருடைய மனைவி ஸ்ரீ வித்யா. இவர்களுக்கு 21 வயதில் ஸ்ரீ வர்ஷன் என்ற மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 4 ஆம் தேதி திடீரென ஸ்ரீ வர்ஷனுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஸ்ரீ வர்ஷன் உயிரிழந்தார்.

 

மகனின் உயிரிழப்பைத் தாங்க முடியாத தாய் ஸ்ரீ வித்யா, தொடர்ந்து மகனின் ஞாபகத்திலேயே இருந்தார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு ஸ்ரீ வித்யா வெளியேறிவிட்டார். அதில் 'தன்னுடைய மகனைப் பிரிந்து வாழ முடியவில்லை. அவன் சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன். மகள் 12 ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும். நீ அழ வேண்டாம். தந்தையை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்' என உருக்கமாக அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த அர்ச்சகரான சதீஷ், மனைவி காணாமல் போனது குறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். உடனடியாக காவல் ஆய்வாளர் ராஜன் அந்த பகுதியில் இந்த சிசிடிவி காட்சிகளை பரிசோதித்தார். அப்பொழுது, ஸ்ரீ வித்யா மெட்ரோ மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றது தெரிய வந்தது. அங்கிருந்து காசிக்கு புறப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கங்கையில் ஜல சமாதி அடையப் போவதாக ஏற்கனவே உறவினர்களிடம் செல்போனில் கூறியதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

 

தொடர்ந்து ரயில்வே போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் கொடுக்கப்பட்டு முழு முயற்சியுடன் விசாரணை செய்து நாக்பூரில் ஸ்ரீ வித்யாவை உடனடியாக மீட்டனர். 'தற்கொலை செய்து கொண்டால் அடுத்த பிறவி மிகவும் கொடியதாக இருக்கும். எனவே புனித நதியான கங்கையில் இருந்து ஜல சமாதி ஆகலாம் அதனால் மோட்சம் கிடைக்கும்’ என அவர் நம்பியதாக போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்