நாமக்கல் அருகே, திமுக பெண் கவுன்சிலர் திடீரென்று கணவர், மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தவர் தேவிபிரியா (46). இவருடைய கணவர் அருண்லால் (53). நகர திமுக பிரதிநிதியாக இருந்தார். அருண்லால், ராசிபுரம் பெரிய கடை வீதியில் சிறிய அளவில் தங்க நகைக்கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள், பெங்களூருவில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இளைய மகள் மோனிஷா (17), ராசிபுரத்தில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார்.
ஜூலை 12ம் தேதி காலை 7.30 மணி ஆகியும் அருண்லாலின் வீடு திறக்கப்படாததால், அப்பகுதியில் உள்ள உறவினர்கள் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். கதவை தட்டினர். நீண்ட நேரம் முயற்சித்தும் பலன் இல்லை. கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அருண்லால், கவுன்சிலர் தேவிபிரியா, மகள் மோனிஷா ஆகிய மூன்று பேரும் தூக்கில் தனித்தனியாக சடலமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.
அருண்லால் சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர். 13வது வார்டில் இந்த சமூகத்தினர்தான் பெரும்பான்மையாக உள்ளனர். சடலங்களைப் பார்த்து அந்தப் பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் ஆய்வாளர் சுகவனம் உள்ளிட்ட காவல்துறையினர் நிகழ்விடம் வருவதற்குள் மூன்று சடலங்களும் தூக்கில் இருந்து கீழே இறக்கி வைக்கப்பட்டு இருந்தன. சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல் மாவட்ட திமுகவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்களிடம் விசாரித்தோம். “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே அருண்லால் கடனில் இருந்துள்ளார். தேர்தலின்போது தேர்தல் செலவுக்காகவும் அருண்லால் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். தேர்தலுக்குப் பிறகு எப்படியும் சம்பாதித்து விட முடியும் என்ற நம்பிக்கையில் அங்கே இங்கே கடன் வாங்கி செலவு செய்து வெற்றி பெற்று விட்டார்.
ஆனால், தேர்தலுக்குப் பிறகு நடந்ததே வேறு. வார்டுக்கு பெரிதாக நிதி ஒதுக்கப்படவில்லை. அப்படியே ஒதுக்கினாலும் கவுன்சிலர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கவில்லை. இதனால் கடனை அடைக்க முடியாமல் அருண்லால் தடுமாறிக் கொண்டு இருந்தார். கடன்காரர்கள் தரப்பில் நெருக்கடி அதிகரிக்கவே, இப்படியொரு துயரமான முடிவை எடுத்துவிட்டனர். மூத்த மகள் பெங்களூருவில் இருந்ததால் அவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்” என்கிறார்கள் உறவினர்கள்.
கடன் நெருக்கடி மட்டுமின்றி, அண்மைக் காலமாக அருண்லால் வேறு ஒரு சிக்கலிலும் சிக்கித் தவித்ததாகச் சொல்லப்படுகிறது. திருட்டு நகைகள் வாங்கியதாக வெளியூர் மாவட்ட காவல்துறையினர் அவரிடம் நகைகளை கேட்டு நெருக்கடி கொடுத்ததாகவும், இல்லாவிட்டால் கைது செய்து விடுவதாக அச்சுறுத்தியதாகவும் சொல்கின்றனர். இந்தப் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுமாறு திமுக முக்கியப்புள்ளி ஒருவரை அணுகியதாகவும், அதற்கு அவரோ இதுபோன்ற விஷயங்களில் உதவ முடியாது என்று கைவிரித்து விட்டதாகவும் கூறுகின்றனர்.
இது தொடர்பாக, விசாரணை அதிகாரியான ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமாரிடம் கேட்டோம். “அருண்லாலின் மனைவிக்கு தைராய்டு பிரச்சனை இருந்துள்ளது. மூத்த மகளுக்கு நரம்பியல் தொடர்பான பாதிப்புகளும், இருதய பாதிப்புகளும் இருந்துள்ளன. இதற்காக அருண்லால் பல இடங்களில் கடன் வாங்கித்தான் மருத்துவச் செலவுகளை செய்து வந்துள்ளார். கடன் நெருக்கடி இருப்பதாக உறவினர்களிடமும் அடிக்கடி கூறியிருக்கிறார். அதனால் மன உளைச்சலில் அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றார் டி.எஸ்.பி.
ஜூலை 11ம் தேதி மாலை 3 மணியளவில், பள்ளி விடுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாகவே மகள் மோனிஷாவை அருண்லால் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாராம். அன்று மாலையே அவர்கள் மூவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மகளுக்கு மட்டும் விஷம் கொடுத்து குடிக்க வைத்துவிட்டு, கவுன்சிலர் தேவிபிரியாவும், அருண்லாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் காவல்துறையினர், மூன்று பேருமே தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்து கொண்டனர் என்றும், கழுத்தில் கயிறு இறுக்கியதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
தகவல் அறிந்து மூத்த மகள் பகல் 2 மணியளவில் நாமக்கல் வந்து சேர்ந்தார். ராசிபுரத்தில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டு இருந்த தாய், தந்தை, தங்கையின் சடலங்களைப் பார்த்து கதறித் துடித்தார்.
ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.