Skip to main content

தொடர் கனமழை; பேருந்து நிலையத்தில் சூழ்ந்த மழைநீர்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

Rain Water surrounds Virudhachalam bus stand

 

வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் மழை தொடங்கி தொடர்ந்து பெய்து வந்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தண்ணீர் வடிந்த விவசாய வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கியுள்ளது.

 

கடலூரில் மஞ்சக்குப்பம், நேதாஜி சாலை, கடலூர் முதுநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் செம்மண்டலம், புதுப்பாளையம், திருப்பாதிரிபுலியூர், உப்பலவாடி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளிலும் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, நெல்லிக்குப்பம்,  விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

Rain Water surrounds Virudhachalam bus stand

 

பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தில் காட்டாறு பகுதியில் ரூ. 2.50 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018 ஆம் ஆண்டில் தொடங்கியது. இந்தப் பணி இன்னும் முழுமை பெறவில்லை. மேம்பாலக் கட்டுமானப் பணிக்காக காட்டாறு பகுதியில் தற்காலிக மாற்றுப் பாதை அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்ததால் தற்காலிக தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலிருப்பு, கருக்கை, காங்கிருப்பு, முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

 

விருத்தாசலத்தில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்து நிலைய பகுதிக்கு வந்த வடிகால் நீர் பேருந்து நிலையப் பகுதியைச் சூழ்ந்து இடுப்பளவுக்கு தண்ணீர் நிறைந்ததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியைப் பார்வையிட்ட நகர்மன்றத் தலைவர் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையர் சேகர் ஆகியோர் உடனடியாக பேருந்து நிலையப் பகுதியில் இருந்த இடிபாடுகளை அகற்றி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்