Skip to main content

நெல்லையில் விடிய விடிய மழை..! - உயரும் அணைகள்.. சீறும் அருவிகள்..!

Published on 15/08/2018 | Edited on 27/08/2018



மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கேரளாவில் கொட்டித்தீர்க்கிற. கனமழை, மலைப்புரத்தின் அண்டை மாவட்டமான நெல்லை மாவட்டத்தின் முழுமையிலும் காற்றும் கனமழையும், சாரல் மழையுமாக விடிய விடியக் கொட்டியது. சிக்ஸர் அடித்தார் போன்று பகலிலும் தெடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கிறது.

இதன் தாக்கம், அருவிகள் மற்றும் நீர் நிலைகளில் எதிரொலித்தது மலையிலுள்ள சேர்வலாறு அணை 141 அடி நிரம்பியதால் அதன் நீர் வெளியேற்றம் காரணமாக தாமிரபரணியில் வெள்ளம் பாய்வதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நெல்லை கலெக்டர் ஷில்பா அறிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட புளியரை பார்டரான கேரளாவின் கழுதுருட்டியிலிருக்கும் 16 கண் பெரிய ரயில்வே பாலம் சாலையருகே ஏற்பட்ட மண்சரிவால் கனரகவாகனங்களின் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது இலகுரக வாகனங்கள் எச்சரிக்கையோடு கேரளாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றன. மலையிலிருக்கும் அம்பைப் பகுதியை ஒட்டியுள்ள பாபனாசம், மணிமுத்தாறு அணைகளின் உயரம் ஏறிக் கொண்டே போகிறது. அந்த மலையின் உப அணைகளான ராமநதி, கடனாநதி போன்றவைகள் நிரம்பி வழிகின்றன.

செங்கோட்டையின் மேக்கரை மலையிலுள்ள அடவிநாயினார் அணை நிரம்பி வழிவதால் திடீரென திறக்கப்பட்ட அதன் உபரி நீர் பாய்ந்ததால் அந்தப் பகுதியின் நெல் வயல்கள் வெள்ள நீரில் மூழ்கின. பாபனாசம் மலையிலுள்ள அகஸ்தியர் அருவியும், கல்யாணதீர்த்தமும் வெள்ளமாய் பொங்கிப் பிரவாகிக்கின்றன.

இதனிடையே குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ள நீர் சீறிப் பாய்வதால் சுற்றுலாப் பயணிகள் அதன் அருகில் கூடச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி போலீஸ், அருகில் செல்ல தடை விதித்துள்ளது.

அருவிகளில் வெள்ளப் பாய்ந்து கொண்டிருக்க இன்று அதிகாலை ஆறு மணி வாக்கில் குற்றாலம் புலி அருவியில் குளிப்பதற்காகச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரைப் போலீஸ் தடுத்திருக்கிறது. அதையும் பொருட்படுத்தாமல் புலி அருவியில் குளித்தவரை ஃபோர்சான அருவித் தண்ணீர் தாக்கியதால், அதன் தடுப்புக் கம்பியில் விழுந்தவரின் உயிர், அங்கேயே பிரிந்திருக்கிறது.

போலீஸ் விசாரணையில் அவர் சிவகாசியைச் சேர்ந்த பிரபு என்பது தெரிய வந்திருக்கிறது.

சார்ந்த செய்திகள்