Skip to main content

காங்கிரஸ் ஆட்சியில் ராகுல் செய்யப்போவது என்ன? - ப.சிதம்பரம் பேட்டி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
'Rahul's five guarantees'-P. Chidambaram interview

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. நேற்று விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு கையெழுத்தான நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு காங்கிரஸுடன் தொகுதிப்பங்கீடு கையெழுத்தாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ப.சிதம்பரம், ''காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஐந்து வாக்குறுதிகளை தந்திருக்கிறார். ஐந்து கேரண்டி தந்திருக்கிறார். இந்த ஐந்து வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையில்  இடம்பெற இருக்கிறது. அந்த ஐந்து வாக்குறுதிகள் குறித்து நான் இங்கே பேசப் போகிறேன்.

முதல் கேரண்டி இன்று வேலையில்லாமை கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. அரசு வெளியிடுகின்ற புள்ளி விவரங்களை எல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மொத்த வேலையில்லாமை எட்டு சதவீதம். பட்டதாரிகள் மத்தியில் வேலையில்லாமை 42 சதவிகிதம். அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். அதையெல்லாம் இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த வேலையில்லாமையை போக்குவதற்கு முதல் வழி, மத்திய அரசில் இருக்கக்கூடிய காலியிடங்களை நிரப்புவது, மத்திய அரசினுடைய நிறுவனங்கள், மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கல்வி நிலையங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய அரசினுடைய பொதுத்துறை, மத்திய அரசின் மருத்துவமனைகள் இவைகள் எல்லாம் சேர்த்து பார்த்தால் 30 லட்சம் காலி இடங்கள் இருக்கிறது.

இந்த 30 லட்சம் இடங்களையும் பூர்த்தி செய்யலாம். முதல் கேரண்டி காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அரசு அமைந்தால் 30 லட்சம் காலி இடங்களையும் பூர்த்தி செய்வோம். இரண்டாவது கேரண்டி அரசு நடத்தக்கூடிய தேர்வுகளில் கேள்வித்தாள் கசிவது என்பது வழக்கமாகிவிட்டது. உத்திரபிரதேசத்தில் மட்டும் கடந்த 10,  15 நாட்களில் இரண்டு கேள்வித்தாள்கள் கசிந்திருக்கிறது. இதற்காக தேர்வை ரத்து செய்தார்கள். எத்தனை செலவு, எவ்வளவு அலைச்சல், எவ்வளவு துன்பம், எவ்வளவு மனச்சோர்வு அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டிருக்கும். இதையெல்லாம் தடுக்க முடியும். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் தேர்வுத்தாள் கசிவை தடுப்போம்.

மூன்றாவது கேரண்டியாக ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு சட்டப் பாதுகாப்பு சமுதாய பாதுகாப்பு ஏற்படுத்தி தரப்படும்' என தொடர்ந்து பேசி வருகிறார்.

சார்ந்த செய்திகள்