Skip to main content

குடிநீரில் மனிதக்கழிவுகளை கலந்த விவகாரம்; குற்றவாளியை நெருங்கிய போலீசார்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

Pudukkottai district vengaivayal water tank incident 

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் உள்ள ஒரு சில குழந்தைகளுக்கு கடந்த மாதம் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அப்போது, குழந்தைகளின் ஒவ்வாமைக்கு குடிநீரில் கிருமி கலந்துள்ளதா என ஆய்வு செய்யுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

 

டிசம்பர் 25ந் தேதி பட்டியலின மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வந்த தண்ணீர் கலங்கலாக உள்ளதாக அப்பகுதி பெண்கள் கூறியுள்ளனர். இதனால் அங்கு இருந்தவர்கள் உடனடியாக மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி பார்த்த போது தொட்டியில் இருந்த குடிநீரில் மனிதக் கழிவு மிதந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதுகுறித்து தகவலறிந்த விசிக நிர்வாகிகள், கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஆகியோர் வந்து பொதுமக்களிடம் விவரங்களைக் கேட்டறிந்து குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். மேலும், சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தமிழ்நாடு அரசு கவனத்திற்கும் கொண்டு சென்றார். அதே நேரத்தில் அன்னவாசல் ஒன்றிய அதிகாரிகள், வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

 

இந்தப் பிரச்சனை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மறுநாள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போது பட்டியலின மக்கள் தங்கள் கிராமத்தில் தீண்டாமை உள்ளதாக கூறினார்கள். உடனே அங்குள்ள அய்யனார் கோயிலுக்கு அவர்களை அழைத்துச் சென்று வழிபடச் செய்ததோடு அருகில் உள்ள டீ கடையில் ஆய்வு செய்து அங்கிருந்த குவளைகளை கைப்பற்றி டீ கடைக்காரரை கைது செய்தனர்.

 

மறுநாள் அமைச்சர் மெய்யநாதன் சமத்துவ வழிபாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, மாற்று குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீரில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். குடிநீரில் மனிதக் கழிவு கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.

 

சிறப்பு புலனாய்வு குழுவினர் முதற்கட்டமாக சுமார் 70 பேரிடம் விசாரணை செய்த பிறகு 7 பேருக்கு சம்மன் கொடுத்து வெள்ளனூர் காவல் நிலையம் அழைத்து நீண்ட நேரம் விசாரணை செய்து வீடியோ பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நாளில் அந்தப் பகுதியில் சுற்றிய இளைஞர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனியாக ஒரு தொழில்நுட்ப புலனாய்வு குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த குழுக்களின் புலனாய்வில் குறிப்பிட்ட நபரிடம் வந்து நிற்கிறது. அந்த நபர் பற்றிய விவரங்களை வெளியிட போலீசார் தயாராகும் நிலையில் பல்வேறு நிலைகளில் இருந்தும் தடைகள் வருவதாகக் கூறப்படுகிறது. அதனால் யார் அந்த நபர் என்பதை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களிடமே விசாரணை நடப்பதாகவும் ஒரு தலைபட்சமாக விசாரணை இருப்பதாகவும், அதனால் விசாரணையை மாற்ற வேண்டும் என்றும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் மற்றும் எவிடன்ஸ் கதிர் ஆகியோர் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். "பொதுமக்களின் குடிநீரில் மனிதக் கழிவுகளை கலந்து மாவட்டத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திய சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்தவித பாரபட்சமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் கவிவர்மன். 

 

 

சார்ந்த செய்திகள்