Skip to main content

கொள்ளிடம் இடது கரை சாலையை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை!

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
Public demand to complete Kollidam left bank road as soon as possible

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் இடது கரையில் கடலூர் மாவட்டமும், வலது கரையில் மயிலாடுதுறை மாவட்டம் அமைந்துள்ளது.  இடது கரை ஓரத்தில் வல்லம்படுகை, தீத்துக்குடி, கருப்பூர், நளம்புத்தூர், ஒற்றர்பாளையம், முள்ளங்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.  இந்தக் கரையின் சாலை கடந்த 2 வருடத்திற்கு முன்பாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து உள்ளது.

இந்தச் சாலையில் இரு சக்கர வாகனம் மற்றும் நடந்து செல்பவர்கள் அடிக்கடி விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை ஒருங்கிணைத்து 500க்கும் மேற்பட்டவர்கள் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே இடது கரையில் புதிய சாலை அமைக்க வேண்டும் என மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி கீழ்வேளூர் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலியிடம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சந்தித்து இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசுவதற்கு மனு அளித்தனர்.  அவரும் இந்தக் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் பேசினார்.

இதனைத் தொடர்ந்து வல்லம்படுகையில் இருந்து புளியங்குடி வரை 13 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க ரூ.19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  இதில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை என இரண்டு துறைகளும் தனித்தனியாக சாலைகள் அமைக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் வல்லம்படுகையிலிருந்து முள்ளங்குடி வரை 9 கிலோமீட்டர் தூரத்தை 7 கோடியே 77 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணியை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மேற்கொண்டு வருகிறது. பணியின் ஒப்பந்த காலம் முடிந்து விட்டது என்றும் ஆனால் இன்று வரை அந்தப் பகுதியில் சாலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவில்லை உடனடியாக சாலை அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து குமராட்சி ஒன்றிய பொறியாளர் அருள்மொழியிடம் கேட்டபோது, "இதில் மழை நேரத்தில் தாமதம் ஏற்பட்டது பணியின் ஒப்பந்தம் முடிந்தது உண்மைதான் கூடுதல் அவகாசம் கேட்டு ஒப்பந்ததாரர் கடிதம் அளித்துள்ளார். ஆற்றின் கரை என்பதால் சாலை தரமாக இருக்க இரு புறமும் சாலை மண் அணைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதில் 3 கிலோ மீட்டர் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 3 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கப்படும். ஒருநேரத்தில் சாலையைக் கரையில் அமைக்கமுடியாது.  எனவே விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

சார்ந்த செய்திகள்