Skip to main content

ஆந்திராவில் தமிழர்கள் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்! பாப்பலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Published on 22/02/2018 | Edited on 22/02/2018


பாப்பலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் 2018 பிப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தின் ஒன்டிமிட்டா ஏரியில் ஐந்து தமிழர்கள் பிப்ரவரி 18 அன்று சடலங்களாக மீட்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் அதிகளவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் நடப்பதால், காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக ஏரியில் குதித்தவர்கள் இறந்திருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டாலும் ஏழு நபர்களும் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பலராலும் முன்வைக்கப்படுகிறது. 
 

இறந்தவர்களின் உடல்களில் உள்ள காயங்கள் ஐவரும் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுக்கச் செய்கின்றது. தமிழர்களின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இதற்கான தேவையான நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் துரிதமாக எடுக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு செயற்குழு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. 
 

ஏப்ரல் 7, 2015-ல் ஆந்திராவின் சேஷாசலம் வனப்பகுதியில் என்கௌண்டரில் கொல்லப்பட்ட இருபது தமிழர்களுக்கான நீதி இதுவரை கிடைக்காத நிலையில் தற்போது இச்செய்தி நம்மை வந்தடைந்துள்ளது. செம்மரக்கட்டைகள் கடத்தல் என்ற பெயரில் ஆந்திராவில் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் படுகொலை செய்யப்படுவதும் தொடர்கதையாக மாறியுள்ள நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

2. மக்கள் விரோத திட்டங்களை கைவிடுங்கள்! 

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மீத்தேன் எரிவாயு திட்டம் மற்றும் காவிரி டெல்டா பகுதியில் கெய்ல் குழாய் பதிக்கும் திட்டங்களை கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த வருடம் மே மாதம் 19ஆம் தேதி முதல் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  தமிழகத்திற்கு நலன் பயக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதில் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மட்டும் மும்முரமாக உள்ளது. இந்நிலையில் 2016-ல் நிறுத்தப்பட்ட கெய்ல் நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கும் பணிகள் தற்போது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டாரத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடங்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து போராடுபவர்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதுடன் மக்கள் விரோத திட்டங்களை தமிழகத்தில் உடனடியாக நிறுத்த தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. 

3. 'நீட்'டிலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு தேவை! 

மருத்துவ நுழைவுத் தேர்வான 'நீட்'டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படாததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எங்குள்ளது என்பதை கூட அறிவிக்காத மத்திய அரசாங்கம் தனக்கு தமிழக நலனில் அக்கறை இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த ஆண்டு முதல் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க உறுதியான நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் தேவையான அழுத்தங்களை மத்திய அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. மருத்துவ கனவு சிதைக்கப்பட்டதால் பறிபோன கடைசி உயிர் அனிதாவின் உயிராக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு அரசாங்கங்கள் செயல்பட வேண்டும். மாநில அரசின் சுயாட்சி உரிமையில் கைவைக்கும் இப்போக்கிற்கு எதிராக மாநில அரசாங்கம் உறுதியாக போராட வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி ஆற்றும் உரையை அனைத்து மாணவர்களையும் கட்டாயம் பார்க்க வைக்கும் எதேச்சதிகார போக்கை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. ''எந்த தேர்வையும் எழுதாத ஒருவர் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து எப்படி பேச முடியும்?'' என்று மாணவர்கள் கேள்வி எழுப்பியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் தமிழக அரசு மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு இரையாகக் கூடாது என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

4. தமிழகத்தின் அமைதியை கெடுக்கும் பா.ஜ.க தலைவர்களுக்கு கண்டனம்! 

 தமிழகம் அமைதிப் பூங்காவாக இல்லை என்றும் தமிழகம் தீவிரவாதத்தின் உறைவிடமாக மாறி வருகிறது என்றும் கூறிய மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் பொறுப்பற்ற பேச்சை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் சட்டம் ஒழுங்கு தரவுகளை ஒருமுறை முழுமையாக பார்த்துவிட்டு மத்திய அமைச்சர் தமிழகம் குறித்து தனது கருத்துக்களை தெரிவிக்கலாம். தமிழகத்தின் அமைதியை கெடுக்கும் வகையில்  பா.ஜ.க., இந்து முன்னணி போன்ற அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர் என்பதை போராட்டம் என்ற பெயரில் அரசு பேருந்துகளை அவர்கள் உடைத்ததன் மூலம் நாம் தெரிந்து கொண்டோம். தமிழகம் அமைதிப் பூங்காவாக தொடர இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சங்பரிவார அமைப்பினர் மீது மாநில அரசாங்கம் உறுதியான நடவடிக்கையை எடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ சோதனை; மேலும் 5 பேர் கைது

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

NIA raid conducted in Tamil Nadu; 5 more arrested

 

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, மதுரை, தேனி, திருச்சி ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்குத் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னையில் திருவொற்றியூர், ஓட்டேரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

 

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றதாகத் தகவல் வெளியானது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நேதாஜி நகரில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மண்டல தலைவர் முகமது கைசர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதேபோல் மதுரையில் நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

தேனி கம்பம்மெட்டு காலனியில் உள்ள எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் அலி வீட்டில் சோதனை நடைபெற்றது. சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த தஞ்சையைச் சேர்ந்த பயணி முகமது அசாப்பிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிலும் காவல்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

 

இந்த சோதனையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்துல் ரஸாக், முகமது யூசுப், முகமது அப்பாஸ், கெய்ஸர், சாதிக் அலி ஆகியோர் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையில் டிஜிட்டல் ஆயுதங்கள், ஆவணங்கள், சட்ட விரோத ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

Next Story

மதுபான ஊழல் வழக்கு; அப்ரூவரான நபரால் துணை முதலமைச்சருக்கு நெருக்கடி

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

 

Liquor corruption case; Crisis for the Deputy Chief Minister due to the approved person!

 

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தினேஷ் அரோரா அப்ரூவராக மாறியதால், டெல்லி மாநில துணை முதலமைச்சருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

 

மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மாநில துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகங்கள் எனச் சுமார் 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

 

டெல்லி அரசின் கலால் கொள்கை அறிவிப்பில் விதிமீறல் இருப்பதாகக் கூறி முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்தனர். அதில், டெல்லி மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தினேஷ் அரோரா, தான் அப்ரூவராக மாறுவதாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். 

 

எனவே, நவம்பர் 14 ஆம் தேதி அன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவர் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமானவர் என்பதால், அவருக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.