Skip to main content

‘பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பை எடுப்போம்’ - களைக்கட்டிய பொங்கல் கொண்டாட்டம்

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Pongal celebration on behalf of Trichy  High School

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் இணைந்து மண்ணைக் காக்க மஞ்சப்பையுடன் சூழல் பொங்கல் நேற்று (12.01.24) காலை 10.00 மணியளவில் கொண்டாடப்பட்டது.   இந்நிகழ்வில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எழிலரசி தலைமையில் மக்கள் சக்தி இயக்க மாவட்டச் செயலாளர் ஆர். இளங்கோ, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும் தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி. நீலமேகம், 35வது மாமன்ற உறுப்பினர் சுரேஷ், தண்ணீர் அமைப்பு  உதவி செயலாளர் ஆர்.கே. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முன்னதாக ஆசிரியப் பெருமக்கள் பொங்கல் வைத்து இயற்கையைப் போற்றி வணங்கினர்.

தொடர்ந்து பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் கவிபாலன் தலைமையில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. தண்ணீர் அமைப்பின் செயலர் பேரா.கி. சதீஷ்குமார் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் பறையாட்டம், சிலம்பம், சுருள்வாள், கும்மியாட்டம் நடைபெற்றது. ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்று கும்மியாட்டம் ஆடினார்கள். மற்றும் நிகழ்வில் மண்ணைக் காத்திட உயிர்ம நேயம் போற்றிட மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

‘பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பை எடுப்போம்’ எனும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சூழலைச் சிதைக்கும் நெகிழியைத் தவிர்ப்போம். மண்வளம் காத்திட மஞ்சப்பை எடுப்போம் என்பதை வலியுறுத்தி, பொங்கல் விழாவை முன்னிட்டு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து சக்கரைப் பொங்கல், பொங்கல், காய் கூட்டுகள் உடன் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவிற்கு திருச்சி மாவட்ட தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பால் குணா, அருண், பெற்றோர் ஆசிரியர்களின் சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

சார்ந்த செய்திகள்