Skip to main content

அருந்ததியர் உள் ஒதுக்கீடு தீர்ப்பு... பெரியார், கலைஞர் சிலைகளுக்கு மாலைபோட்டுக் கொண்டாடிய பா.ம.க!

Published on 27/08/2020 | Edited on 27/08/2020

 

P.M.K. Chairman

 

அருந்ததியர் சமூக மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்தது தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டில், தங்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது தான்.  இந்த கோரிக்கை மறைந்த திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது. அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீத உள்ஒதுக்கீட்டை சட்டவடிவம் ஆக்கினார் கலைஞர். இந்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாநில அரசுகள் அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் நிலையைத் தொடரலாம் என்று நீதிமன்றம் கூறியது. மேலும், இன்று முழுமையான விசாரணைக்கு 7 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு வழக்கை மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து உள் ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தைக் கொண்டாடும் வகையில், ஈரோடு மாவட்டத்திலுள்ள அருந்ததியர் சமூகத்தின் இளைஞரணி அமைப்பாளரும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவருமான வடிவேல் ராமன் கட்சி மற்றும் இயக்க நிர்வாகிகளோடு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியார் மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி இந்தத் தீர்ப்பை கொண்டாடினார்.

 

P.M.K. Chairman


அப்போது பேசிய வடிவேல் ராமன் "அருந்ததியர் சமூகத்திற்கு மிகப்பெரிய வாழ்வியல் நம்பிக்கையைக் கொடுத்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். ஆகவே அவரது ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்ட அந்த 3 சதவீத உள்ஒதுக்கீட்டை இப்போது தொடரலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது. இது, எங்கள் சமூக மக்களுக்கு இனிப்பாய் உள்ளது. இதை ஆட்சியில் உள்ள போதே செய்து காட்டிய கலைஞரின் புகழ் ஓங்கட்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்