Skip to main content

"கரோனா முதல் அலையில் மூழ்கிய பொருளாதாரம் மீளாத நிலையில்..."- கமல்ஹாசன்!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

petrol diesel price hike makkal needhi maiam kamal haasan statement

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று (12/05/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. கடந்த 66 நாட்களாக உயராமல் இருந்த விலை தேர்தல் முடிந்ததும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. 

 

கரோனா முதல் அலையில் மூழ்கிய பொருளாதாரம் மீளாத நிலையில் மக்கள் வேலையிழப்பு, வருவாய் இழப்பு, மருத்துவச் செலவினங்கள் என அல்லற்பட்டு வருகிறார்கள். இரண்டாவது அலை ஒரு சுனாமியைப் போல தாக்கி தமிழக மக்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டி போட்டுள்ளது.

 

இந்த இக்கட்டான சூழலில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து வருவது வேதனையளிக்கிறது. சாமானிய மக்களின் மீது மேலும் மேலும் சுமை ஏற்றப்படுகிறது. எரிபொருட்களின் விலையேற்றத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பது ஆட்சியாளர்கள் நன்கறிந்ததே. 

 

டாஸ்மாக் மது விற்பனையை வருவாய் வாய்ப்பாகக் கருதுவதைப் போல எரிபொருள் நிரப்பும் நிலையங்களையும் வருமானத்தைப் பெருக்கும் வழிகளாக மத்திய, மாநில அரசுகள் கருதுகின்றனவோ எனும் அச்சம் ஏற்படுகிறது.

 

மத்திய அரசிற்கு எரிபொருட்களின் விலையைக் குறைக்கும் எண்ணம் இருப்பது போலவே தெரியவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கேட்டுக் கொள்கிறேன். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலையைக் குறைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும்". இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்