Skip to main content

தொடரும் மான் வேட்டை... போலீஸாரிடம் சிக்கிய நபர்கள்...

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

People caught by police in deer case...
                                                                    மாதிரி படம்

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீஸார் நேற்று மாலை ரிஷிவந்தியம் மணலூர்பேட்டை செல்லும் சாலையில் மேலதேனூர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டி.வி.எஸ் மோட்டார் வண்டியைத் தடுத்து நிறுத்தினார்கள். அந்த மொபட் வண்டி நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது. 

 

இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், அந்த வாகனத்தை துரத்திச்சென்று மடக்கிப்பிடித்து, அதில் பயணித்தோரை விசாரித்தனர். அவர்கள் திருக்கோவிலூர் அருகிலுள்ள மேம் மாளூரை சேர்ந்த குழந்தை சாமி, கொம்ப சமுத்திரத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் முப்பத்தைந்து கிலோ எடையுள்ள மான் கறியையும் அந்த வண்டியில் எடுத்துச்சென்றது தெரியவந்தது. மேலும் இருவரிடமும் நாட்டுத் துப்பாக்கி இருந்துள்ளது.

 

உடனே போலீஸார் அவர்களிடமிருந்து  மான் கறி, நாட்டுத்துப்பாக்கி, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, அவைகளை அத்தியூர் வனச்சரக அலுவலகத்தில் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்துள்ளனர். பட்டப்பகலில் நாட்டுத் துப்பாக்கியுடன் மான் வேட்டையாடி, மான் கறியுடன் தப்ப முயன்றவர்களை போலீஸார் வளைத்துப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இப்பகுதி வனத்தில் அவ்வப்போது காட்டு விலங்குகளை வேட்டையாடுவதும், காவல்துறையிடமும் வனத்துறையிடமும் வேட்டையாடுபவர்கள் அவ்வப்போது சிக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 


 

சார்ந்த செய்திகள்