Skip to main content

பட்டுக்கோட்டை கார் விபத்து; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Pattukottai car incident The  toll rises to 5

தூத்துக்குடியிலிருந்து வேளாங்கண்ணிக்கு, கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு காரில் 11 பேர் நேற்று (20.01.2024) அதிகாலை சென்று கொண்டிந்துள்ளனர். அப்போது இவர்கள் சென்ற கார் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை  சேதுபாவாசத்திரம் காவல் சரகம் மனோரா அருகே செல்லும்போது சாலை ஓரங்களில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் சாலையை மறைத்து நின்றதால் வேகமாகச் சென்று சிறிய பாலத்தில் மோதியுள்ளது. அதி வேகமாக வந்த கார் பாலத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் அந்த காரில் பயணித்த பாக்கியராஜ் (62), ஞானம்பாள் (60), ராணி (40), சின்னப்பாண்டி (40) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த கார் விபத்தில் மரிய செல்வராஜ் (37), பாத்திமா மேரி (31), சந்தோஷ்செல்வம் (7), சரஸ்வதி (50), கணபதி (52), லதா (40), சண்முகத்தாய் (53) ஆகிய 7 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து இந்த சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவித்திருந்தார். அதன்படி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 25 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தனது இரங்கலையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த கணபதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் படுகாயமடைந்த 6 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.