Skip to main content

சொர்க்க வாசல் தர்க்கம்! -ஆண்டாள் கோவிலில் ஐதீக மீறல்!

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

“இது பரமபத வாசலா? குடோன் வாசலா?” 
-ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடந்த ஒரு விஷயத்தை வீடியோ எடுத்து அனுப்பிய கோவிந்தராஜ் என்பவர் எழுப்பிய கேள்வி இது!

 

அந்த வீடியோவில், வைகுண்ட ஏகாதசி நாளில் திறக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக, அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள் சுமைதூக்கும் தொழிலாளர்கள். இதைத்தான் ஐதீக மீறல் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

temple

 

அது என்ன சொர்க்கவாசல்?  

வைகுண்ட ஏகாதசி நாளில் வீட்டில் விரதம் இருந்து வழிபடுவதுடன், பெருமாள் கோவில்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டால், இவ்வுலக வாழ்வும் செழிக்கும்; மறுமை வாழ்வும் நல்லவிதத்தில் அமையும் என்பது வைணவர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

 

‘எம்பெருமானே! வைகுண்ட ஏகாதசி நாளில் அர்ச்சாவதாரம் எனப்படும் மனிதவடிவில் தாங்கள் சொர்க்கவாசல் வழியாக வெளிவரும்போது, தங்களைத் தரிசிப்பவர்களும், தங்களைப் பின்தொடர்ந்து வருபவர்களும், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் யாவும் நீங்கப்பெற்று முக்திபெற வேண்டும். பகவானே! தாங்கள் அருள வேண்டும்.’ என்பதுதான், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. 

 

 

பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற,  108 வைணவத் திருத்தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த  திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அடுத்தபடியாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிதான்,  பிரசித்திபெற்றதாகக் கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளிலும், அத்திருவிழா முடியும் வரையிலும் முறைப்படி திறக்க வேண்டிய நாட்களில் மட்டுமே  சொர்க்க வாசலானது திறக்கப்படும். 

 

temple

 

“இந்த ஆன்மிக நடைமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் மீறப்படுகிறது. அதனாலேயே, சுற்று வட்டார பகுதிகளில் நன்றாக மழை பெய்தும், ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் மழை பெய்வதில்லை. நிச்சயமாக, இது ஆண்டாளின் கோபமாகத்தான் இருக்க முடியும்.” என்கிறார் கோவிந்தராஜ். 

 

”சில வருடங்களுக்கு முன் செயல் அலுவலராக இருந்தவரை சகல விதத்திலும் கவனித்தவர் என்பதால்,  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எங்கெங்கும் ‘ராம’ ராஜ்ஜியம்தான்! அந்த செயல் அலுவலரின் மனைவி, ஆண்டாள் கோவில் அலுவலகத்துக்கு வந்து, ‘என் கணவரை இப்படி ஆக்கிவிட்டீர்களே’ என்று சவுண்ட் விட்டதையெல்லாம்  ‘வரலாறு’ பதிவு செய்யத் தவறவில்லை. அதன்பிறகு, மாணிக்கமான அந்த செயல் அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டு,  பழனி கோவிலில் முக்கிய பதவி வகித்ததும் நடந்தது. வருடங்கள் கடந்தாலும், அதே   ‘ராம ராஜ்ஜியம்’ இன்று வரையிலும் தொடர்கிறது.  பிரசாத ஸ்டால் வைத்திருக்கும் ராம நாமத்தைக் கொண்டவர், கழிவு நீரை வெளியேற்றுவதற்கும், குப்பைகளை வெளியே எடுத்துச்சென்று கொட்டுவதற்கும்கூட, இந்த சொர்க்க வாசல் வழியைத்தான் பயன்படுத்தி வருகிறார். இதன் காரணமாக,  சுத்தபத்தமில்லாத பெண்கள், சர்வசாதாரணமாக சொர்க்கவாசல் வழியே சென்று வருகின்றனர்.” என்பதெல்லாம் குற்றச்சாட்டாக சிலரால் முன்வைக்கப்படுகிறது. 

 

 

ஸ்ரீஆண்டாள் கோவில் நிர்வாகத் தரப்பிடம் பேசினோம். “கோவில் நில குத்தகை மூலம் கோவிலில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளைத்தான் லாரியில் ஏற்றுகிறார்கள். முன்வாசல் வழியாக வந்தால் அதிக தூரம் மூட்டைகளைத் தூக்கிச் சுமக்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளிகளின் வசதிக்காகத்தான், வருடத்தில் வெகு சில நாட்களில் மட்டும் அரிசி மூட்டைகளை வெளியே எடுத்துச் செல்வதற்கு சொர்க்க வாசல் பகுதியைப் பயன்படுத்துகிறோம். பக்தர்களோ, ஸ்ரீவில்லிபுத்தூர் முக்கியஸ்தர்களோ, ஐதீக மீறல் என்று நேரடியாகச் சொன்னால், இதற்கான தீர்வு கிடைக்கும். வீடியோ எடுப்பது, சமூக வலைத்தளங்களில் பரப்புவதெல்லாம் உள்நோக்கத்துடன் செய்கின்ற காரியமாகத்தான் இருக்க முடியும். நிச்சயம் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்காது.” என்றனர்.  

 

சொர்க்க வாசல் திறப்பு குறித்து சிலர் தர்க்கம் செய்வதும், கோவிலில் யாரோ வரம்பு மீறி செயல்படுவதும், அந்த எம்பெருமானுக்குத்தான் வெளிச்சம்! 

 

 

 

சார்ந்த செய்திகள்