Skip to main content

“தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதுதான் எங்கள் கொள்கை” - செல்வபெருந்தகை

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
Our policy is to establish a Kamaraj regime in Tamil Nadu says Selvaperunthagai

வேலூர் மாநகர் மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பங்கேற்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி 57 ஆண்டு காலம் ஆட்சி இழந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி, காமராஜர் ஆட்சி அமைப்பதற்கு  மக்களோடு மக்களாக காங்கிரஸ் கட்சியின் கொள்கை ,கோட்பாடு காங்கிரஸ் கட்சி என்னென்ன சட்டங்கள் திட்டங்கள் கொண்டு வந்துள்ளது என்பதை மக்களிடம் சென்று சேர்க்க உள்ளோம்” என்றார்.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் தற்கொலையா என்பதை முடிவு செய்ய முடியவில்லை என வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தற்பொழுது கிடைத்துள்ள தகவல்களைப் பார்க்கும்போது அது முழுக்க முழுக்க கொலைதான். அவர் இறந்ததைப் பார்க்கும் பொழுது அதைத் தற்கொலை தான் என்று சொல்ல முடியாது. அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை என்பதால் வடக்கு மண்டல ஐ ஜி அதை கொலையா தற்கொலையா எனக் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்தக் கொலை வழக்கு தொடர்பாக இன்னும் உடற்கூறு ஆய்வு முழுவதுமாக கிடைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். அவருடைய விசாரணையில் அவர் அப்படி கூறி இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் பார்வையில் அது கொலைதான்” என்று பதிலளித்தார்.

சபாநாயகர் அப்பாவுவை தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தற்பொழுது புலன் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அதில் நாம் தலையிட கூடாது. அப்படி ஏதாவது தகவல் தெரிவித்தால் அதை விசாரணை கேட்க குந்தகம் ஏற்படும். எங்களைப் பொறுத்தவரை அது தற்கொலை இல்லை” என்றார்.

ஜெயக்குமார் கொலை வழக்கில் தமிழக காவல்துறையின் விசாரணை திருப்தி இல்லை என்றால் சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணை கேட்பீர்களா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “காவல்துறையில் இதுவரை 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புலன் விசாரணை நடைபெறும் பொழுது அதில் நாம் தலையிடக்கூடாது. தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது ஒரு தெளிவு வரும் முழுமையான உடற்கூறு ஆய்வு வந்த பிறகு காவல்துறையினர் தெரிவிப்பார்கள். விசாரணை முடிந்த பிறகு இது தொடர்பாக பதிலளிக்கிறேன்” என்றார்.

இந்தியா முழுவதும் ஒரு சதவீதம் கூட காங்கிரஸ் கட்சி வளர்ச்சி இல்லையென பாஜக மாநில தலைவர் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஏமாற்றுகிறார்கள்; தகுதி இல்லாதவர்களும் அப்படி தான் கூறுவார்கள். நாடு விடுதலை அடைந்த போது ஒரு குண்டு ஊசி கூட தயாரிக்க கூடிய அளவில் இந்தியா இல்லை. ஜவஹர்லால் நேரு வந்த பிறகு நாட்டில் மிகப்பெரிய கட்டமைப்பை ஏற்படுத்தினார். ஆனால் பாஜக கடந்த பத்து ஆண்டுகளில் என்ன செய்தது? உண்மைக்கு புறம்பாக பேசுவது தான் பாஜகவின் வேலை. தமிழர்களை பயங்கரவாதி எனக் கர்நாடக எம் பி கூறியிருக்கிறாரே அதற்கு முதலில் தமிழக பாஜக தலைவர் ஒரு கண்டன மாவது தெரிவித்தாரா?. ஆர்எஸ்எஸ் கைக்கூலி தான் அவர். தேசத்திற்காக விவாதம் நடத்த ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் பிரதமர் மோடி அவரால் ஏதும் பேச முடியாது” என்றார்.

உடுமலையில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இதுபோன்ற சம்பவங்களுக்கு காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் விழிப்புடன் இருக்க வேண்டும் குறிப்பாக உளவுத்துறைகள் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்ற பகுதிகளில்  கண்காணிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் குற்றமில்லாத  தமிழ்நாடு என்பதை காவல்துறை ஊர்ஜிதப்படுத்த வேண்டும். கஞ்சா போதைப் பொருட்கள் ஆப்கானிஸில் இருந்து மத்திய அரசின் பல்வேறு காவல்துறை கட்டுப்பாட்டை மீறி தமிழகத்தில் வருகிறது. மத்திய அரசின் பல்வேறு உளவுத்துறை, பாதுகாப்பு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. இதனை அனுமதிப்பது பாஜகவை சார்ந்தவர்கள் தான் என்றார். மேலும், எங்களுடைய கொள்கை தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான் என்று செல்வ பெருந்தகை கூறினார்.

சார்ந்த செய்திகள்