Skip to main content

காணாமல் போவதற்கு இது ஒன்றும் மளிகை பொருள் அல்ல; சேகர்பாபு தடாலடி!

Published on 26/10/2021 | Edited on 27/10/2021

 

fgh


உலகப் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலயக் குளத்தின் ஒருபகுதி நேற்று பெய்த கனமழையின் காரணமாகச் சரிந்து விழுந்தது, அந்த இடத்தை இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தவர்.  "உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் கமலாலயக்குளம் ஒரு கரை சரிந்து விழுந்ததைக் கேள்விப்பட்டவுடன் தமிழக முதல்வர் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் உடனடியாக தொடர்பு கொண்டு விழுந்த கரைகளை உடனடியாக அப்புறப்படுத்தி மேலும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும், குளிக்க வரும் பக்தர்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டார். முழுமையாக இடிந்த மதில் சுவரைக் கட்டுவதற்கும், ஒட்டுமொத்தமாகக் கமலாலயக் குளத்தின் மதில் சுவரை வல்லுநர்களைக் கொண்டு அதன் ஸ்திரத்தன்மையை ஆராய்ந்து நிரந்தரமான ஒரு தீர்வை காண்பதற்கும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

திருவாரூர் மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறையும் ஒருங்கிணைந்து அதிவேக ஏற்பாடுகளை மேற்கொண்டு புனரமைத்து குளம் முழுவதும் மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு அனைத்து வகை முன்னெச்சரிக்கையுடன் வெகு விரைவில் கமலாலயக் குளத்தில் மதில் சுவர் கட்டி முடிக்கப்படும்." என்றார்.

 

மேலும்," தியாகராஜர் கோவிலுக்குச் சொந்தமான ஓடை காணாமல் போயிருக்கிறதே என்கிற கேள்விக்கு பதில் கூறியவர்,"  காணாமல் போவதற்கு இது ஒன்றும் மளிகை பொருள் அல்ல. இடம் அங்கேயேதான் இருக்கும். குறிப்பிட்டிருக்கும் அந்த இடத்தை ஆய்வு செய்து சட்டத்தின்படி அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை ஆய்வு மேற்கொண்டிருக்கிறது. அந்த இடங்களில் ஆக்கிரமிப்பு உண்மையில் இருக்குமானால் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அந்த இடங்களை இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமாக்கப்படும்." என்றார்.

 

சிலை கடத்தல் குறித்தான கேள்விக்குப் பதில் கூறிய அமைச்சர்," கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை விட இந்த ஐந்து மாத திமுக ஆட்சியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முழுவதுமாக ஓராண்டு திமுக ஆட்சி நிறைவு பெறும்போது வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்ட சிலைகள் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளன. எத்தனை சிலை கடத்தல் தமிழகத்தில்  தடுக்கப்பட்டுள்ளன என்கிற விவரங்களை அளிப்போம் " என்றார்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்