Skip to main content

"இது நாகாலாந்து அல்ல; தமிழ்நாடு என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்!"- முரசொலி கடும் விமர்சனம்!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

"This is not Nagaland; he must realize that it is Tamil Nadu!" - Murasoli harsh criticism!

 

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நிலைப்பாட்டை தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. 

 

இன்று (29/01/2022) வெளியான முரசொலி நாளிதழில், "தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரவி, சில நேரங்களில் தனது அதிகார எல்லை மீறி செயல்படத் தொடங்கியுள்ளாரோ என எண்ணிடத் தோன்றுகிறது! இன்றைய தமிழக ஆளுநர் ரவி, தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்கு முன் நாகாலாந்தின் ஆளுநராக பொறுப்பேற்று பணியாற்றிய போது, நடந்து கொண்ட விவகாரங்கள் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகின. 

 

ஆளுநர் ரவி அரசியல்வாதியாக இருந்து, அரசியல் தட்ப வெப்பங்களை உணர்ந்து, அனுபவங்கள் பல பெற்று ஆளுநர் ஆனவரில்லை; அவர் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து, ஓய்வுக்குப் பின் கவர்னராக அமர்த்தப்பட்டவர்! மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல்துறைக்குத் தேவை; பல நேரங்களில்அந்த பாணி கைக்கொடுக்கும், ஆனால் அது அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும். 

 

குடியரசுத் தின விழாவையொட்டி, ஆளுநர் ரவி விடுத்துள்ள செய்தி, அவர் தனது பொறுப்புணராது தமிழக மக்களின் மானத்தை உரசிப்பார்க்க நினைப்பதாகவே தோன்றுகிறது. 'நீட்' டுக்கு எதிராக தமிழகச் சட்டமன்றம் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி மாதங்கள் சில கடந்தும், அது கிடப்பிலே கிடக்கிறது; அதன் நிலை என்ன என்று தெரியாத நிலையில், 'நீட்' வருவதற்கு முன், இருந்த நிலையைவிட நீட் வந்த பின் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கை அதிகரித்துள்ளது என்று கூறியிருக்கிறார். 

 

மேதகு ரவி, ஆளுநர் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு, மற்ற இந்திய மாநிலங்களைப் போன்றது அல்ல; என்பதை முதலில் அவர் உணர வேண்டும்! இந்த மண், அரசியலில் புடம் போடப்பட்ட மண்! இங்கே குக்கிராமங்களில் வசிப்பவர்கள் கூட அரசியல் தெளிவு மிகுந்தவர்கள். 

 

ஆளுநர் ரவி எத்தகைய கருத்தையும், தெரிவிக்கு முன் தமிழகத்தைப் புரிந்துக் கொண்டு, அதன் வரலாற்றைத் தெளிவாக்த் தெரிந்து கொண்டு கூறுவது, அவரது பதவிக்கு பெருமை சேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்! 

 

ஏறத்தாழ 7 கோடி தமிழக மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழகச் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய தீர்மானத்தின் மீது எந்தக் கருத்தும் தெரிவிக்காது, சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டு இருப்பது எந்த வித நியாயம் என்பதை ஆளுநர் ரவி தெரிவிக்க வேண்டும்!

 

பல பிரச்சனைகளில், எதிரும் புதிருமாக இருந்தாலும்; தமிழகத்தின் சில பிரச்சனைகளில் ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒன்றிணைந்து நிற்கும்! அதிலே ஒன்று, இருமொழிக் கொள்கை; மற்றொன்று 'நீட்' வேண்டாமென்பது! 

 

ஆளுநர் ரவி இதனை உணர்ந்து, உரிய தகவலை மேலிடத்துக்குத் தந்து, ஒட்டு மொத்தத் தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சி செய்ய வேண்டும்! அதனை விடுத்து இங்கே 'பெரியண்ணன்' மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால், "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா..." எனும் பழங்கதை மொழியை அவருக்கு நினைவுப்படுத்தி விரும்புகிறோம்; அதாவது, இது நாகாலாந்து அல்ல; தமிழகம் என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்