சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து ஏசி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புறையை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
இந்த துவக்கப்பள்ளியில் எல்கேஜி, யுகேஜி மற்றும் 5ம் வகுப்பு வரை 178 மாணவ,மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், கிள்ளை முன்னாள் பேரூராட்சி தலைவருமான கிள்ளை ரவீந்திரன் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து ரூ.3லட்சம் செலவில் சிசிடிவி கேமரா, புராஜக்டர், மடிகணிணி, குளிர்சாதன வசதியுடன் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனை மாணவர்களின் பயன்பாட்டுக்கு துவக்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை கவுரி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் நடராஜன், மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அலமேலு வரவேற்று பேசினார். சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், மாவட்ட கல்வி அலுவலர் மோகன் ஆகியோர் விளக்கேற்றி ஸ்மார்ட் வகுப்பை துவக்கி வைத்து பேசினர். கிள்ளை பேருராட்சி செயல் அலுவலர் சுந்தரம், பள்ளியின் முன்னாள் மாணவரும், பேராசிரியருமான ஆறுமுகம், ரமேஷ்பாபு, கற்பனைசெல்வம், கிராம முக்கியஸ்தர் அழகர் தலைமையாசிரியர்கள் சிவகுமாரவேல், வேதரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பள்ளியில் பணியாற்றும் தூய்மை பணியாளார்களுக்கு சார் ஆட்சியர் மகாஜன் சால்வை அனிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் பள்ளியின் மாணவரும் பேரூராட்சி மன்ற தலைவர் தலைவர் கிள்ளை ரவீந்திரன் நன்றி கூறினார்.