ஜேடர்பாளையம் அருகே, மர்ம நபர்களின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. விவசாயிகளின் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் 1000க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை வெட்டி சாய்த்ததோடு, பம்ப் செட்டுகளையும் சேதப்படுத்தியுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த ஜேடர்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மனைவி சத்யா (28 பெயர் மாற்றப்பட்டுள்ளது). பி.காம்., பட்டதாரி. இவர், கடந்த மார்ச் 11 ஆம் தேதி, அதே பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றார். அன்று மாலை அவர் மேய்ச்சல் நிலம் அருகே உள்ள ஓடைப் பகுதியில் சேற்றில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆரம்பத்தில் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
உடற்கூராய்வில் சத்யாவின் உடலில் 38 இடங்களில் முள் கீறலால் ஏற்பட்டதுபோன்ற காயங்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. சத்யா கொலை வழக்கு தொடர்பாக, உள்ளூரில் வெல்லம் காய்ச்சும் ஆலைக்கொட்டாய் நடத்தி வரும் சதாசிவம் என்பவரிடம் வேலை செய்து வரும் நீலகிரியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
ஆனால் பிடிபட்ட சிறுவன், பொய்யான குற்றவாளி என்றும், சத்யா கொலையின் பின்னணியில் சதாசிவத்தின் ஆலையில் வேலை செய்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 3 தொழிலாளிகள் மீது சந்தேகம் இருப்பதாகவும் சத்யாவின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
சம்பவம் நடந்த பகுதியில் கொலையுண்ட சத்யாவின் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அதேநேரம், கரும்பாலை நடத்தி வருவோர் அனைவரும் வேறு ஒரு சமூகத்தினர் என்பதோடு, அவர்கள்தான் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை அளித்து ஆதரவு தருவதாகவும், அவர்களால்தான் சத்யா கொல்லப்பட்டார் என்றும் தகவல் பரவியது.
இதையடுத்து ஜேடர்பாளையம் அடுத்த சம்பந்தப்பட்ட பகுதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படும் அபாயம் உருவானது. இந்நிலையில்தான் சதாசிவம், கொத்துக்காரர் என்கிற சக்திவேல் ஆகியோர் வீடுகளில் மர்ம நபர்கள் கடந்த மார்ச் 15ம் தேதி தீ வைத்தனர். ஏப்ரல் 14ம் தேதி குழந்தைவேல், பூங்கோதை ஆகியோர் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இதையடுத்து ஏப்ரல் 27ம் தேதி மீண்டும் குழந்தைவேலின் தோட்டத்திற்கு புகுந்த மர்ம நபர்கள் அவருக்குச் சொந்தமான பவர் டில்லர், நீர்ப்பாசன உபகரணங்களுக்கு தீ வைத்தனர். இதில் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசமாகின. இந்த பரபரப்புக்கு இடையே மே 13ம் தேதி நள்ளிரவு எம்.ஜி.ஆர். என்கிற முத்துசாமியின் ஆலைக்கொட்டாயில் வேலை செய்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், வடமாநிலத் தொழிலாளர்கள் நான்கு பேர் பலத்த காயம் அடைந்தனர். ராகேஷ் (19) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அங்கு மேலும் பதற்றம் உருவானதை அடுத்து, மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. ஆகியோர் நிகழ்விடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர். ஊரைச் சுற்றிலும் 17 இடங்களில் புதிய சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. என்னதான் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த போதும், மர்ம நபர்களின் அட்டகாசம் மட்டும் ஓய்ந்தபாடில்லை.
மே மாதம் 17ம் தேதி நள்ளிரவில், வீ.கரப்பாளையம் - ஜேடர்பாளையம் சாலையில் ஆலைக்கொட்டாய் உரிமையாளர் முத்துசாமியின் மருமகன் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோப்புக்குள் நுழைந்துள்ளனர். அந்த தோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், சில பாக்கு மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இந்த சம்பவத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக இதுபோன்ற மர்ம சம்பவங்கள் நடக்காமல் இருந்தன.
இந்நிலையில் ஜூன் 24ம் தேதி பொத்தனூரைச் சேர்ந்த சவுந்தரராஜன் என்பவருக்கு சின்னமருதூரில் உள்ள 1.5 ஏக்கர் பாக்குத் தோப்பில் நுழைந்த மர்ம நபர்கள், 1500க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி அழித்தனர். அதே பகுதியில் உள்ள தங்கமுத்து, சுப்ரமணி, இளங்கோவன், ராமலிங்கம், சாமியப்பன், செந்தில் ஆகியோரின் தோட்டத்தில் உள்ள பம்ப் செட்டுகளையும் அந்த கும்பல் நாசப்படுத்தியது.
இதன்பிறகு, மீண்டும் ஐ.ஜி. சுதாகர் அந்த ஊருக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஜூலை 8ம் தேதி நள்ளிரவு மீண்டும் சவுந்தரராஜன் தோட்டத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த 1000க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களையும் வெட்டி சாய்த்தனர்.
மேலும், பெரிய மருதூர் பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரின் தோட்டத்தில் 20 சென்ட் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த மரவள்ளிக் கிழங்கு செடிகளையும் வேரோடு பிடுங்கி வீசி எறிந்துள்ளனர். அப்பகுதியில் மேலும் சிலரின் தோட்டத்திற்குள்ளும் புகுந்த மர்ம கும்பல் பம்ப் செட்டுகளையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து காவல்துறை பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை எஸ்.பி. ராஜேஷ்கண்ணா, பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. ராஜமுரளி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மற்றும் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரித்தனர்.
மர்ம நபர்களின் தொடரும் அட்டகாசத்தால் ஜேடர்பாளையம், வீ.கரப்பாளையம், வடகரையாத்தூர், பெரிய மருதூர், சின்ன மருதூர் உள்ளிட்ட கிராம மக்களிடையே அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.