Skip to main content

நல்லது செய்தால் வாழ்க என்பதும் கெடுதல் செய்தால் ஒழிக என்பதும் தான் சனநாயகம் - சீமான் பேச்சு

Published on 11/09/2018 | Edited on 12/09/2018
se


 பாரதியாரின் 97ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் இமானுவேல் சேகரனாரின் 61ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று 11.09.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான், தலைமையில் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இருவரது திருவுருவப்படங்களுக்கும் சீமான் மலர் தூவி  புகழ்வணக்கம் செலுத்தினார்.

 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,   ‘’விடுதலைப்பாக்களை இம்மண்ணிற்குத் தந்த மகத்தான கவிஞன் பெரும்பாவலர் எம் பாட்டன் பாரதிக்கும், சாதிய இழிவைத் துடைத்தெறிய, வருணாசிரமக் கட்டமைப்பைத் தகர்த்துச் சமனியச்சமூகம் அமைக்கப் போராடிய பெருந்தமிழர் எங்கள் ஐயா இம்மானுவேல்சேகரனார் ஆகிய இருவரது நினைனைவைப் போற்றுகிற இந்நாளில் தமிழ்த்தேசிய இனப் பிள்ளைகள் சாதி, மத உணர்ச்சிகளைக் கடந்து ‘நாம் தமிழர்’ என்கிற தேசிய இன உணர்விற்குள் கலந்து சமனியச்சமூகம் அமைக்க உறுதியேற்கிறோம். அதுதான் அந்த மகத்தான முன்னோர்களுக்கு நாம் செலுத்துகிற உண்மையான புகழ் வணக்கமாக இருக்கும். 


எழுவர் விடுதலையில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிற தீர்ப்பானது 27 ஆண்டுகளாக நடத்திய சட்டப்போராட்டத்தின் விளைவாகக் கிடைத்திருக்கிற ஒரு நல்வாய்ப்பு. அதனைத் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள ஆளுநருக்குத் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். எழுவரின் விடுதலை என்பது தமிழக அமைச்சரவையின் உணர்வு மட்டுமல்ல! ஒட்டுமொத்தத் தமிழின மக்களின் உணர்வு. அந்த உணர்வின் பிரதிபலிப்பாக உயிர் தியாகங்களும், இன்னல்களைத் தாங்கிய எண்ணற்றப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. கால் நூற்றாண்டு கண்ணீர் போராட்டம் இது. ஆகவே, இந்த உணர்வினை அவமதித்துத் தமிழக ஆளுநர் காலம்தாழ்த்தாமல் உடனடியாகத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுகிற பட்சத்தில் காலநீட்டிப்பு செய்தால் தமிழர் நிலம் முழுமைக்கும் போராட்டக்களமாக மாறும். அத்தகைய சூழலை ஏற்படுத்தாமல் ஆளுநர் அவர்கள் தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஒப்புதலை அளித்து எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டும்.

 

இன்றைக்குக் காங்கிரசின் தலைவர்கள் யாவரும் இவ்விவகாரத்தில் அமைதி காக்கின்றபோது அதன் செய்தித்தொடர்பாளர், தமிழகம் தீவிரவாத தேசம் போலக் கருத்தைத் தெரிவிக்கிறார். வடஇந்தியாவில் குண்டுவெடித்தபோது கிரிக்கெட் ஆடவந்த இங்கிலாந்து அணி நாடு திரும்பிவிட்டது. அதன்பிறகு இந்தியாவில் எங்குக் கிரிக்கெட் நடத்தலாம்? எது அமைதியான மாநிலம்? எனக் கணக்கிடுகிறபோது தமிழகத்தைத் தேர்வுசெய்தார்கள். இந்திய நிலப்பரப்பிலே தமிழகம்தான் அமைதியான இடம் என்பதால் தேர்வுசெய்தார்கள். விளையாட்டின்போது அமைதியான நிலப்பரப்பாக இருந்த தமிழகம் இப்போது பயங்கரவாதிகளின் பூமியாகிவிட்டதா? ஆகவே, தமிழகத்தின் மீது திட்டமிட்டுச் சுமத்தப்படுகிற வீண்பழி. இதனைத் துடைத்தெரிய வேண்டியது முதல் கடமையாகும். எழுவர் விடுதலைக்கெதிராக யார் யாரெல்லாம் கருத்துத் தெரிவிக்கிறார்களோ, அவ்விடுதலையை எதிர்க்கிறார்களோ அவர்கள்தான் தமிழினத்தின் எதிரிகள்; துரோகிகள். அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிற தவறை இனியும் செய்யாது அவர்களைத் தேர்தல் களத்தில் வீழ்த்த வேண்டும். 

 

முதலாளிகளுக்கான பொருளாதாரக்கொள்கை - எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்யும் முறை இருப்பதால்தான் கட்டுபாடற்ற விலையேற்றம் நிலவுகிறது. மத்திய அரசால் பெட்ரோல்-டீசல் விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பெட்ரோல்-டீசல் விலையேற்றத்தால் கனரக வாகனங்கள், கார், மோட்டார் சைக்கிள்கள் வைத்திருப்பவர்கள் மட்டும் பாதிக்கப்படுகின்றனர் என்று கடந்துவிடமுடியாது. உணவு, மருந்து உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு விநியோகிக்கக் கனரக வாகனங்களில் ஏற்றிச் செல்லும்போது  வாகன எரிபொருள் செலவு, சுங்கவரிச் செலவு போன்றவை கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும்போது அந்தச் சுமை உற்பத்தி பொருட்களின் அடக்க விலையில் சேர்க்கப்படுகிறது. இதனால் ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து பொருட்களின் விலையும் ஏறுகிறது; நம் நாடு ஏற்றிருக்கும் தனியார்மய, தாராளமய, உலகமயப் பொருளாதாரக்கொள்கைகளில் மாற்றம் ஏற்படாதவரை ஆட்சிப் பொறுப்பில் யார் வந்தாலும் இந்நிலை தொடரும். 

 

கீழ்த்தட்டு மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இவ்வரசுகளுக்கு இல்லை. குடிசைகள் இல்லாத நகரத்தை உருவாக்க குடிசைவாசிகளைப் அப்புறப்படுத்தும் பணிகள் தான் நடைபெற்றுவருகிறது. சென்னையிலும் இதுதான் நடந்தேறிவருகிறது. தவறான கொள்கைகள் கொண்ட ஆட்சியாளர்களின் மேல்தட்டு மக்களுக்கான திட்டங்களில் 'ஸ்மார்ட் சிட்டி இருக்கும் 'ஸ்மார்ட் வில்லேஜ்  இருக்காது. அடிப்படை வசதி வாய்ப்பற்றுக் கிராமங்கள் வெறிச்சோடி போவதும் நகரங்கள் பிதுங்கி வழிவதும் தொடர்கதையாகிப் போனால் அரிசி, பருப்பு, பால், இறைச்சி உள்ளிட்ட உணவு, உடை, மருந்து போன்ற இன்றியமையாப் பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படும்; அதனால் விலையேற்றம் ஏற்படும். அதனைத்தொடர்ந்து பசி, பட்டினி, பஞ்சம் ஏற்படும். இதனைக் கருத்திற்கொண்டு செயல்பட இங்கு யாரும் இல்லை. அதனால் தான் இப்பொருளாதாரக் கொள்கைகள் மிகவும் ஆபத்தானது என்கிறோம்.

[

இன்றைய ஆட்சியாளர்கள் எப்போதும் மேல்தட்டு மக்களைப்பற்றியே கவலைப்படுவார்கள்; சொந்தமாகக் கார், மோட்டார் பைக், ஆட்டோவில் செல்ல வசதியற்ற வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பேருந்துகளின் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்துவது யாரைப் பாதிக்கும். அதைப்பற்றி இவ்வரசுகள் சிந்திக்காது ஏனென்றால் அவர்கள் தான் தங்கள் உரிமைகளுக்காகக் குரலெழுப்ப முடியாத அப்பாவி கீழ்தட்டு மக்கள். அதனால் அவர்களின் குரல்வலையை மேலும்மேலும் நெறிப்பார்கள். இதுதான் இங்குள்ள பிரச்சினை. 


சோபியா விவகாரம் மன்னிக்கமுடியாத அளவிற்கு மிகப்பெரிய சர்வதேசக் குற்றமல்ல; சட்டமன்ற, பாராளுமன்ற சனநாயக முறையைப் பின்பற்றும் இந்நாட்டில் நீதிமன்றத்தில் கூட வாதி-பிரதிவாதி என்று இரு தரப்பு உள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர் தரப்பில் ஒரு வாதமும் அரசு தரப்பில் ஒரு வாதமும் முன் வைக்கப்பட்டு இருதரப்பு வாதங்களும் ஆய்ந்தறியப்பட்டு நீதி வழங்கப்படுகிறது. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஆளுங்கட்சி - எதிர்கட்சி இருதரப்பின் மாற்றுக் கருத்துகளும் பெறப்பட்ட பிறகே சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்படுகின்றன.  இத்தகைய நாட்டில் ஒரு கட்சி, அரசு தனக்கு எதிர் கருத்துகளே இருக்கக்கூடாது எனக்கூறுவது கொடுமையான சர்வாதிகாரம். வாழ்க! வாழ்க! என்றே போற்றவேண்டும் ஒழிக! என்று தூற்றக்கூடாது என்றால்  எல்லோரும் வாழ்த்தும்படி ஆட்சி செய்யவேண்டும். அதைச் செய்யாது விட்டுவிட்டு ஒழிக என்று முழக்கமிட்ட தங்கை சோபியா மீதுமட்டும் குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல; அது தங்கை சோபியா ஒருத்தியின் குரல் மட்டுமன்று; ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் இளைய தலைமுறையின் குரல். இங்குள்ள மாணவர்கள் உங்கள் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஒடுங்கி அமைதியாக இருக்கலாம்; வெளிநாட்டில் ஆய்வு மாணவியாகப் படித்துவந்ததால் தங்கை சோபியா துணிந்து குரலெழுப்பிவிட்டாள். அதை ஒரு குற்றமாகப் பார்க்க முடியாது. இதை மதிப்புமிக்கத் தலைவர்கள் சாதரணமாகக் கடந்துபோக வேண்டும்.

 

கலைஞர்  காவேரி மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நேரில் சந்திக்க நான் சென்றபோது அங்குக் கூடியிருந்த திமுகத் தோழர்கள் திரும்பி போ! சீமான் ஒழிக! என்று முழக்கமிட்டனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்துபோகவேண்டும். அரசியலில் வாழ்க ஒழிக முழக்கங்களும், கருப்பு கொடி காட்டுவதும், எதிர் போராட்டங்களும் சாதரணம். மக்கள், நல்லது செய்தால் வாழ்க என்பதும் கெடுதல் செய்தால் ஒழிக என்பதும் தான் சனநாயகம். வாழ்க என்று சொல்லும்போது மகிழ்ச்சியடையும் நீங்கள் ஒழிக என்று கூறும்போது இகழ்ச்சியடையாமல் அந்தப் பெண்ணின் கருத்தை நேர்மையாக எதிர்கொண்டு தாங்கள் செய்த எதாவது ஒரு நல்லதைச் சான்றாகக் கூறி கருத்துமுரண்களை விளக்கி புரியவைக்க முயற்சித்திருக்கவேண்டும். இவ்விவகாரத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தது நல்ல அணுகுமுறை அல்ல; தங்கை சோபியா செய்தது தவறே அல்ல! ’’


 

சார்ந்த செய்திகள்