Skip to main content

'என் மகராணி என்னைய விட்டு போறியேடா...'-திருச்சியை அதிர வைத்த சம்பவம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் இது கொலைச் சம்பவம் என  சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 19 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜெயஸ்ரீ அதே ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் இரு தரப்பு வீட்டுக்கும் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீராம் என்ற நண்பரின் வீட்டின் மாடியில் மாலை வேளையில் ஜெயஸ்ரீ கிஷோர் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்ரீராமின் நண்பர்கள் தீபக், ராகுல், ரிஷிகேஷ் ஆகியோரும் மொட்டை மாடியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயஸ்ரீ கிஷோர் வழக்கம்போல் ஸ்ரீராம் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென தவறி விழுந்த ஜெயஸ்ரீக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பின் தலையில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்ளலாம் என ஜெயஸ்ரீ கிஷோரிடம் கூறியதாகவும் ஆனால் தற்பொழுது திருமணம் வேண்டாம் என கிஷோர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கைகளாலே கிஷோர் உடைத்துள்ளார். இதனால் அவருடைய கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பக்கத்தில் இருந்த  ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் ஜெயஸ்ரீ மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறி அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஜெயஸ்ரீயை மருத்துவர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததை தெரிவித்ததும் உடன் வந்த கிஷோர் உள்ளிட்ட அத்தனை பேரும் தப்பித்து ஓடி தலைமறைவாகினர். உண்மையாக ஜெயஸ்ரீ தவறிவிழுந்து உயிரிழந்தால் ஏன் நண்பர்கள் அனைவரும் தலைமறைவாக வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தேர்தல் வேட்டை நடத்திய நிலையில் கரியமாணிக்கம் பகுதியில்  உள்ள ஸ்ரீகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் ஐந்து பேரும் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அடைக்கலம் தந்த ஸ்ரீ கிருஷ்ணனையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கிஷோர் அந்த பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தந்தையிடம் ஜெயஸ்ரீயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது கண்ணீர் விட்டு கதறி அழுத அவரது தந்தை, ''அப்பா உனக்கு என்ன பாவம் செய்தேன்... என் மகராணி என்னைய விட்டு போறியேடா... நான் என்ன பாவம் செஞ்ச... கொன்னுட்டாங்களே பாவிங்க எல்லாம்... யாருக்காகவோ உன்னை இழந்துட்டியேடா...'' என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைத்தது.

 

சார்ந்த செய்திகள்