Skip to main content

விவாகரத்து கேட்ட மனைவியை சேர்ந்து வாழலாம் என அழைத்து கொலை; புதுச்சேரி சபாநாயகர் வீட்டருகே நடந்த கொடூரம்...

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

புதுச்சேரியில் சபாநாயகர் வீட்டிற்கு அருகில் பெண் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கணவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விவாகரத்து கேட்டு சென்ற மனைவியை சேர்ந்து வாழலாம் என கணவன் அழைத்து கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

murder in puduchery

 

புதுச்சேரி மடுக்கரையை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் ராஜசேகர். இவரது மனைவி கங்கா. காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை கடைக்கு பால் வாங்கச் சென்ற கங்காவை சபாநாயகர் வீட்டுக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். சபாநாயகர் வீட்டிற்கு அருகிலேயே இந்த கொலை சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

murder in puduchery

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கங்காவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளுடன் வீட்டில் இருந்த கங்காவின் கணவர் ராஜசேகரிடம் கொலையாளிகள் யாராக இருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது மனைவி கங்காவின் நடத்தை சரியில்லை என்றும், அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதால் அவர்களில் யாராவது இந்த செயலை செய்து இருக்கலாம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் இந்த கொலை வழக்கில் கணவர் ராஜசேகர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட அதனை அடுத்து ராஜசேகரை பிடித்து முறையாக விசாரித்தபோது கங்கா கொலை குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

 

murder in puduchery

 

காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் திருமணத்திற்கு பின்னர் கங்கா சில ஆண்களுடன் தவறான பழக்கத்தில் இருந்ததாக  கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கங்காவை  பிரிந்து சென்ற ராஜசேகர் தனியாக வசித்து வந்துள்ளார். அதன்பிறகு மேலும் பல ஆண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது ராஜசேகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அவரை தீர்த்துக் கட்ட நினைத்த ராஜசேகர் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து மனைவியை சாமர்த்தியமாக கொலை செய்ய திட்டமிட்டார்.

 

murder in puduchery

 

அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் சூழலில் மனைவி கங்காவிடம் சேர்ந்து வாழலாம் என்று கூறியுள்ளார். தனது குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேர்ந்து வாழலாம் என்று கூற  கங்காகவும் சம்மதித்துள்ளார். இருந்தாலும் கணவர் ஓட்டுநர் வேலைக்கு சென்ற பின்னர் தனது ஆண் நண்பர்களுடன் கங்கா நெருங்கி பழகி வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு  இருவருக்கும் பிரச்சனை முற்ற கங்காவின் மொபைல் போனை பறித்து ராஜசேகர் உடைத்து போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கங்கா காலையில் தனியாக பால் வாங்க சென்ற தகவலை தனது கூட்டாளிகளுக்கு தெரிவித்த ராஜசேகர் மனைவி கங்காவை கொல்ல  உத்தரவிட்டார்.

 

murder in puduchery

 

இதனையடுத்து இரண்டு நாட்கள் ஒத்திகை பார்த்த கொலையாளிகள் வியாழக்கிழமை கொலை செய்து விட்டு தப்பினர்.கொலை நடந்த நேரத்தில்   ராஜசேகர் வீட்டில் இருப்பதால் காவல்துறைக்கு சந்தேகம் வராது என நினைத்து இந்த கொலையில் இருந்து தப்பிக்க முயன்று உள்ளார். ஆனால் அவரது நடவடிக்கைகள் மற்றும் அவரது தடுமாற்றத்தை வைத்தே ராஜசேகரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த போலீசார் இந்த கொலை செய்தது அவர் கூட்டாளிகள் தான் என்பதை உறுதிப்படுத்தினர். தற்போது ராஜசேகரின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்