Skip to main content

“உழைக்காமல் கஷ்டப்படாமல் பணம் கொட்டும்!” -முகநூல் தோழிகளிடம் நகை பூஜை மோசடி!

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 

‘கேட்பவன் கேனையாக இருந்தால் கேப்பையில் நெய் வடியுமாம்..’

-இந்த கிராமத்துச் சொலவடை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பொருந்திப் போகுமோ? அப்படி ஒரு சம்பவம்தான் விருதுநகர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

 

சாத்தூரைச் சேர்ந்த ராஜ்குமாரும் நவீன்குமாரும் கில்லாடி இளைஞர்கள். தங்களின் மோசடியான செயலுக்கு முகநூலைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். முகநூல் நட்பு என்ற பெயரில் பெண்களுக்கு வலை விரிப்பதும், அவர்களை ஏமாற்றுவதும் நம் நாட்டில் வாடிக்கையாகிவிட்டது. ராஜ்குமாரும் நவீன்குமாரும் அந்த ரக ஆண்கள் அல்ல. வசதி படைத்த பெண்களிடம் பெண் குரலில் பேசி தோழிகள் ஆகிவிடுவர். “நாங்க சீரியல் நடிகைகளாக்கும்..” என்று பெண்களின் பலவீனம் அறிந்து பேசுவார்கள். இவர்களின் சுவாரஸ்யமான பேச்சில் முகநூல் தோழிகள் லயித்து, நம்பிக்கை வைத்தவுடன் “ஒரு கோவில் இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த கோவில். உங்கள் வீட்டு நகைகளை அக்கோவிலில் வைத்து பூஜை செய்தால், செல்வம் பெருகி தொடர்ந்து நல்லதே நடக்கும்.” என்று தூண்டில் போட்டிருக்கின்றனர். கடுமையாக உழைத்திடாமல், எந்தக் கஷ்டமும் படாமல்,  பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு எளிதான வழி இருக்கிறதென்று இவ்விருவரும் உருகி உருகிச் சொன்னதை, அப்படியே நம்பிவிட்டனர் அந்த முகநூல் தோழிகள். பிறகென்ன? தோழிகளின் நகைகளெல்லாம் பறிபோயின.

 

police

 

இரண்டு மாதங்களுக்கு முன் சாத்தூர் டவுண் காவல் நிலையத்தில் சிவகாசியைச் சேர்ந்த ராதிகாவும் செண்பக பவானியும் மோசடியால் தாங்கள் நகைகளை இழந்தது குறித்து புகார் செய்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு, கைபேசி எண் மூலம் ‘ட்ரேஸ்’ செய்தபோது, ராஜ்குமாரும் நவீன்குமாரும்தான் அந்த மோசடிப் பேர்வழிகள் என்பது தெரிந்துபோனது. தனிப்படையினர் இவ்விருவரையும் கொத்தாக அள்ளிக்கொண்டு வந்து விசாரித்தனர். அவர்களிடமிருந்து 61 பவுன் நகைகளையும், ரூ.3 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.   

 

police

 

 

 

police

 

 

police

 

இதே ரீதியில், இவ்விருவரும் பல பெண்களிடம் பேசியே பணத்தைக் கறந்திருக்கின்றனர். யார் யாரை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது குறித்த விசாரணை  தொடர்ந்து நடக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்