Skip to main content

கொளத்தூர் அருகே கனிம நிறுவன ஊழியர் கொலை!

Published on 20/10/2018 | Edited on 20/10/2018

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் மயில்சாமி (56). மேட்டூரில் உள்ள தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் (டான்மேக்) பணிபுரிந்து வந்தார். 


இவருக்கும், இவருடைய வீட்டிற்கு அருகே உள்ள நந்தகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் (அக். 18ம் தேதி) இரவு நந்தகுமாரும் அவருடைய உறவினர்களும் மயில்சாமி வீட்டின் அருகே வந்து தகராறு செய்துள்ளனர்.


மேலும், மயில்சாமியை கல் மற்றும் கட்டையால் சரமாரி தாக்கினர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து நந்தகுமார் மற்றும் உறவினர்கள் தப்பியோடிவிட்டனர். 

 

MURDER


இந்த சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதற்கிடையே, நந்தகுமாரின் வீட்டை யாரோ சேதப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. 


நந்தகுமார் குடும்பத்தினரே தங்களின் வீட்டை சேதப்படுத்திவிட்டு, மயில்சாமி குடும்பத்தார் மீது புகார் கூறுவதாகும் அப்பகுதி மக்கள் சிலர் தெரிவித்தனர்.


இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மயில்சாமிக்கு விஜயா (50) என்ற மனைவியும், 2 மகன், ஒரு மகளும் உள்ளனர்.

சார்ந்த செய்திகள்