Skip to main content

ஒரு லிட்டர் வாங்கினால் அரை லிட்டர் இலவசம்; கள்ளச்சாராயம் அமோக விற்பனை 

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

Massive sale counterfeit liquor Kallakurichi district

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது கல்வராயன் மலை. சேலம், திருவண்ணாமலை, மாவட்டங்களை, ஒட்டி அமைந்துள்ளது இந்த மலைப்பகுதியை பயன்படுத்தி இங்கு கள்ளச்சாராயம் உற்பத்தி செய்வது என்பது பிரபலமான ஒன்று. இங்கு உற்பத்தியாகும் கள்ளச்சாராயம் பல்வேறு மாவட்டங்களுக்கும் கடத்தப்படுவது ஒரு தொடர்கதையான சம்பவங்கள்.

 

கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அவ்வப்போது மலைப்பகுதிக்கு சென்று ரைடு நடத்தி கள்ளச்சாராய ஊரல்களை அழிப்பதும் கள்ளச்சாராயம் கடத்துபவர்களை கண்டறிந்து கைது செய்வதும், அதன் பின் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கள்ளச்சாராயத்தை மட்டும் இதுவரை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு உதாரணமாக சமீபத்தில் இந்த மலை கிராமம் ஒன்றில் கள்ளச்சாராய விற்பனை செய்ய ஊர் மக்கள் மத்தியில் ஏலம் விடும் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் மலையை ஒட்டி உள்ள ஒரு கிராமத்தில் சாராய வியாபாரி ஒருவர் மது பிரியர்களை கவரும் வகையில் ஒரு லிட்டர் சாராயம் வாங்கினால், அரை லிட்டர் சாராயம் இலவசம் என்று அதிரடி ஆடி தள்ளுபடி சலுகை விலையில் அமோகமாக விற்பனை செய்துள்ளாராம் இந்த தகவல் வேகமாக பரவியதையடுத்து அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மது பிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாட்டர் பாட்டில்கள் வாட்டர் கேன்கள் பாலிதீன் கவர்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று போட்டி போட்டுக் கொண்டு கள்ளச்சாராயத்தை வாங்கி வந்ததாக அப்பகுதி மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

 

போதையில் இளைஞர்கள் சீர் அழிவதை தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து வரும் இந்த நேரத்தில் ஜவுளி கடைகளில் ஆடி தள்ளுபடி விலையில் துணிகளை விற்பனை செய்வது போன்று தள்ளுபடி விலையில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல ஒரு லிட்டர் வாங்கினால் அரை லிட்டர் இலவசம் என கள்ளச்சாராய விற்பனை பரபரப்பாக்கி உள்ளனர்.  இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மலை கிராம பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள மலை வாழ் மக்கள் இளைஞர்கள் போதிய படிப்பறிவு இல்லாத காரணத்தினாலும் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாத காரணத்தினாலும் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற ஆந்திரா பகுதிகளுக்கு செம்மரம் வெட்டுவதற்கு கூலிக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையில் சிக்கி சீரழிகிறார்கள். இல்லையென்றால்  மலைப்பகுதியில் உள்ள மறைவிடங்களில் கள்ளச்சாராயம் ஊரல் போட்டு அதை காய்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கும் கடத்தி விற்பனை செய்கிறார்கள். எனவே மலைவாழ் மக்கள் உழைத்து முன்னேற அவர்கள் பிழைப்புக்கு ஏற்ற வகையில் நியாயமான முறையில் தொழில் செய்து பிழைக்கும் வகையில் அரசு அவர்களுக்கு தொழில் சார்ந்த வருமானத்தை உருவாக்கித் தர வேண்டும் என்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்