Skip to main content

கைவிரித்த காவல்துறை...15 நாள் விடுப்பு வழங்கி அதிரடி காட்டிய நீதிமன்றம்...!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு ஜனவரி 10 முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரை 15 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி  மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

madurai-high-court-15-days-parole-Ravichandran

 



முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிசந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், "முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிசந்திரன் உள்ளார். 28 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் வெளியில் வந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் பேரில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை  ஏழு பேரையும் விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில், உத்தரவு வரும் வரை எனது மகன் ரவிசந்திரனுக்கு நீண்டகால பரோல் வழங்கவேண்டும்" என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பின்னர் மனுதாரர் முறையான காரணங்களுடன் விண்ணப்பித்தால் 30 நாட்களுக்கு குறைவாக பரோல் வழங்க தயாராக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒரு மாத கால பரோல் கோரிய விண்ணப்பத்தை மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர், " ரவிச்சந்திரன் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் வசித்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தல் மற்றும் திருவிழாக்கள் நடைபெறுவதால் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க இயலாது" எனக்கூறி நிராகரித்துள்ளார். ஆனால் இதே வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளர், ராபர்ட் பயாஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்கியுள்ளது. ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு, ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 



இந்த வழக்கு இன்று நீதிபதிகள்  ராஜா, புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற நிலையில் அடுத்ததாக பொங்கல் விழா உள்ளது. ஆகவே ரவிச்சந்திரனுக்கு போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்க இயலாது. ஆகவே  சாதாரண விடுப்பு வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள்,  ரவிச்சந்திரன் இதுவரை 4 முறை நீதிமன்றத்தை அணுகியே சாதாரண விடுப்பில் சென்றுள்ளார். 1 முறை தந்தையின் இறுதி சடங்கிற்காக சென்றுள்ளார். விடுமுறைக்கு சென்ற நாட்களில் சிறைக்கு திரும்பும் வரை எவ்விதமான அசம்பாவிதங்களும் நிகழவில்லை. தற்போது உள்ளாட்சித் தேர்தலும் முடிவடைந்துள்ளது. ஆகவே, ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.
 

சார்ந்த செய்திகள்