Skip to main content

அட்டாக் பாண்டிக்கு ஆயுள் தண்டனை!

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

மதுரையில் கடந்த 2007ம் ஆண்டு தினகரன் நாளிதழ் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் கோபிநாத், வினோத், முத்துராமலிங்கம் ஆகிய 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவ வழக்கில் அட்டாக்பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.  

 

attack pandi

 

கடந்த 2007ஆம் ஆண்டு, தினகரன் நாளிதழ், ‘திமுகவின் அடுத்த தலைவராக வர யாருக்கு ஆதரவு’ என்று ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டது. அதன்படி ஸ்டாலின் முதலிடத்திலும் அழகிரி கடைசியாகவும் இருந்தனர். அப்பொழுது திமுகவில் அழகிரியின் ஆதிக்கம் இருந்தது. மதுரையை மையமாகக் கொண்டு தென்மாவட்டங்களில் தனி ஆவர்த்தனம் செய்து வந்தார் அழகிரி. இந்தக் கருத்துக்கணிப்பைப் பார்த்து கொதித்தெழுந்த அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை தினகரன் அலுவலகத்தை நாசமாக்கினர். அடித்து நொறுக்கி தீவைத்துக் கொளுத்தினர். இதில் கோபிநாத், வினோத், முத்துராமலிங்கம் ஆகிய 3 தினகரன் ஊழியர்கள் உயிரிழந்தனர். 

இந்த வழக்கில் அழகிரியின் நெருங்கிய ஆதரவாளரும் திமுகவின் தொண்டரணி நிர்வாகியாக அப்பொழுது இருந்தவருமான அட்டாக் பாண்டி உட்பட 17 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. மதுரை நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. பின்னர், ஆட்சி மாறியது. சிபிஐ வசம் சென்ற இவ்வழக்கு உயர்நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. மேல்முறையீட்டின் விசாரணை தொடர்ந்து நடந்துவந்த நிலையில் கடந்த வாரம் முக்கிய குற்றவாளிகள், சாட்சிகளை நீதிபதிகள் விசாரித்தனர். இன்று, நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு அட்டாக் பாண்டி உட்பட ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தனர். மேலும், உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்