Skip to main content

'மோடி'க்கும் 'பாடி'க்கும் விடை கொடுப்போம்! முத்தரசன் ரைமிங்!!

Published on 05/01/2019 | Edited on 06/01/2019
m

 

நரேந்திர மோடிக்கும், எடப்பாடிக்கும் விடை கொடுக்கும் ஆண்டாக 2019ம் ஆண்டு திகழும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் கூறினார். 

 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு சேலத்தில் வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது. இது தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்திற்கு சனிக்கிழமை (ஜன. 5) வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:


நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு முதல்வர் பதில் அளிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.


கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டி, மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்தது. முதல்வரே நேரில் சென்று கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு குறைந்த அளவே நிதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு எந்த ஒரு கேள்வியையும் கேட்கவில்லை. இந்த அரசு, ஆட்சியை நீட்டித்துக்கொள்ள மட்டுமே மத்திய அரசை நாடுகிறது. 


அதிமுக, பாஜக அரசுகள் தமிழக மக்களுக்கு துரோகம் விளைவிக்கின்றன. தமிழக மக்களை வஞ்சிக்கும் அரசுகளாக உள்ளன. 2019ம் ஆண்டு மோடிக்கும், 'பாடி'க்கும் (முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஓசை நயத்திற்காக 'பாடி' என்றார்) விடை கொடுக்கும் ஆண்டாக அமைய உள்ளது.


புயலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் இன்னும் முடியாமல் உள்ளன. இந்நிலையில், காலியாக உள்ள மற்ற தொகுதிகளை விட்டுவிட்டு திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 


தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்து வருகிறது. ஆணையம் அறிவித்துள்ள இந்த தேர்தலை தற்போது நடத்தக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். 


ஒருவேளை இடைத்தேர்தல் நடந்தால், திமுக வேட்பாளர் எளிதாக வெற்றி பெறுவார். திருவாரூரில் திமுக பலம் பொருந்திய கட்சியாக இருக்கிறது. திமுகவை எதிர்த்துப் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள். 


பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அரசு அறிவித்திருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது. இதனால் அரசின் நோக்கம் நிறைவேறாது. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் தருவது சந்தேகத்திற்குரியது.  

 
சேலம் அருகே, நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, ஏரியை மூடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தமிழக முதல்வரே அடிக்கல் நாட்டியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. உடனடியாக கட்டுமானப் பணிகளை நிறுத்தாவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தால், அப்படி ஒரு ஏரி உள்ளதா? என அலட்சியமாகக் கேட்கிறார்.  இவ்வாறு முத்தரசன் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்