சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டதாக அதிநவீன சொகுசு கார்களை சென்னை போக்குவரத்து போலீஸார் பிடித்து அபராதம் விதித்தனர்.
சென்னையைச் சேர்ந்த தனியார் கார் பராமரிப்பு நிறுவனம் தனது நிறுவனத்தின் ஒரு நிகழ்ச்சிக்காக வெளி மாநிலங்களைச் சேர்ந்த சொகுசு கார்களை சென்னைக்கு எடுத்துவந்தது. அந்த கார்களின் அணிவகுப்பு இன்று காலை சென்னை ஈ.சி.ஆரில் நடந்தது முடிந்தது. அதன்பிறகு அதில் ஆறு சொகுசு கார்கள், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் சீறிப் பாய்ந்தன. இதனைக் கண்ட காமராஜர் சாலையில் போக்குவரத்து கண்காணிப்பில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தி பிறகு அனைத்து கார்களுக்கும் அபராதம் விதித்தனர்.
பிடிப்பட்ட கார்களை காவல்துறையினர் காமராஜர் சாலையில் வரிசையாக நிறுத்தி வைத்தனர். இதனைக் கண்டு அங்கிருந்த மக்கள் அந்த விலை உயர்ந்த சொகுசு கார்கள் அருகே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.