Skip to main content

“எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்” - முதல்வர்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Let's commit to creating an free environment Chief Minister

 

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான (2023) உலக எய்ட்ஸ் நாளின் கருப்பொருள் ‘சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டு எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம்’ என்பதாகும்.

 

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், உலக எய்ட்ஸ் நாள் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “எச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடமிருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட, அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், புதிய எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 13.78 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை சேவைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கர்ப்பிணி பெண்கள் மத்தியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் தொற்றின் தாக்கம் 2003 இருந்த 0.83 சதவீதமானது 0.17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

 

மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் பால்வினை தொற்று சிகிச்சை மையங்கள், நம்பிக்கை மையங்கள் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் போன்ற பல திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் நலன் கருதி ‘தமிழ்நாடு அரசு எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அறக்கட்டளை’ 2009-10 இல் துவக்கப்பட்டு இதுவரை 25 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசிடமிருந்து நிதி பெறப்பட்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் ஊட்டச் சத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

 

இவ்வாறு மாநில அரசும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் இணைந்து ஈடுபாட்டுடன் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்தியமையால் தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் அளவு தற்போது 0.17 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 0.22 விழுக்காட்டை விடக் குறைவானதாகும்.

 

Let's commit to creating an free environment Chief Minister

 

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட, உலக இளைஞர் நாளை முன்னிட்டு, மாநில மற்றும் மாவட்ட அளவில் ‘ரெட் ரன் (Red Run)’ என்ற தலைப்பில் மினி மாரத்தான் போட்டிகள் 550 கல்லூரிகளில் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவுதலைக் குறைக்கும் மகத்தான நோக்கத்துடன், சமூக மற்றும் மெய்நிகர் ஊடகத்தின் வாயிலாகவும், இணையதளம், கைப்பேசி, வானொலி, சுவரோவியம், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நேரடி மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளின் மூலமாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

 

இவ்வாறு, எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி தமிழ்நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, இத்தொற்றினை 2030-ஆம் ஆண்டிற்குள் முடிவுக்கு கொண்டு வரும் இலக்கினை அடைய இன்றே இலட்சியமாக ஏற்று பயணிப்போம். எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்வோம். மேலும், அவர்களை மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்