Skip to main content

திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை! காதலனுக்கு 7 ஆண்டுகள் சிறை!!

Published on 12/11/2019 | Edited on 13/11/2019

கிருஷ்ணகிரி அருகே, திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து குடிக்க வைத்து கொலை செய்த காதலனுக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஜெகதேவி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் மனோகரன் (28). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ரேகா (25) என்பவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இருவரும் சொந்த ஊரிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக (லிவிங் டுகெதர்) குடும்பம் நடத்தி வந்தனர். பலரும் பலவாறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில், ஒரு கட்டத்தில் ரேகா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மனோகரனிடம் நச்சரிக்கத் தொடங்கினார். இதற்கிடையே, வரதட்சணை கொடுத்தால்தான் ரேகாவை மருமகளாக ஏற்றுக்கொள்வோம் என்று மனோகரனின் பெற்றோர் கூறியுள்ளனர். 

krishnagiri incident cool drinks police investigation


இதையடுத்து ரேகா, தனது தாய் செல்வராணியிடம் இருந்து 61500 ரூபாய் வாங்கி வரதட்சணையாக மனோகரன் குடும்பத்தினரிடம் கொடுத்தார். ஆனால் அதன் பிறகும், திருமணம் செய்யாமல் மனோகரன் காலம் கடத்தி வந்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ரேகா, திருமணத்திற்கு வற்புறுத்தி வந்ததால் ஆத்திரம் அடைந்த மனோகரன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 2012ம் ஆண்டு பிப். 22ம் தேதி, ரேகாவை பர்கூரில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்றார். 


‘நாம் இருவரும் கல்யாணம் செய்து கொண்டுதான் வாழ வேண்டுமா? இப்போதே நாம் கணவன், மனைவியாகத்தானே இருக்கிறோம். நமக்குள் பிரச்னை வராமல் இருக்க, நாம் இருவரும் விஷம் குடித்து இறந்து விடலாம்,’என்றெல்லாம் ஏதேதோ பேசி அவரையும் தற்கொலைக்கு தூண்டினார். பின்னர் இரண்டு டம்ளர்களில் குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து, அதில் ஒரு டம்பளரை ரேகாவுக்கு கொடுத்துள்ளார் மனோகரன். அவர் குடித்த பிறகு, மனோகரன் தான் விஷ குளிர்பானத்தைக் குடிக்காமல் கீழே ஊற்றிவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்வதற்குள் ரேகா சிறிது நேரத்தில் இறந்தார். 


இதுகுறித்த புகாரின்பேரில், அப்போதிருந்த பர்கூர் காவல் ஆய்வாளர் சம்பத்குமார், ரேகாவை கொலை செய்த குற்றத்திற்காக மனோகரன், உடந்தையாக இருந்த அவருடைய தாயார் இந்திராணி, தந்தை பெருமாள், உறவினர் ராசாத்தி ஆகிய நான்கு பேரையும் கைது செய்தார். இந்த வழக்கின் விசாரணை, கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத்தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜராகி வாதாடினார். இருதரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் திங்கள்கிழமை (நவ. 11, 2019) தீர்ப்பு வழங்கப்பட்டது. 


முதல் குற்றவாளியான மனோகரனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்திராணி, பெருமாள், ராசாத்தி ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். 


 

சார்ந்த செய்திகள்