Skip to main content

கரகாட்ட கலையைக் கெடுக்கும் கயவர்கள்... கடும் நடவடிக்கை எடுக்குமா தமிழகஅரசு?

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

 

தமிழகத்தின் தொன்மையான கலைகளில் ஒன்றான கரகாட்டம் சில ஆண்டுகளாக அதன் கலைநயத்தை இழந்து கவரச்சி நடனங்களாக மாறியதோடு, ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்றிருப்பது கலைகளை வளர்க்கும் கலைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது.
 

கடந்த சில வாரங்களாக நாட்டுபுற கலைஞர்களின் வாட்சாப் இணைப்புகளின் இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகிவருகிறது. அந்த வீடியோக்களின் மூன்று கரகாட்டக்கார பெண்கள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லாமல் இருந்தது. கணவன் - மனைவிக்கு இடையே அறையில் நடக்கும் இல்லர சம்பவங்கள் இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் சிலர்கூடி நின்று பார்க்கும் விழாகூட்டத்தில் செய்திருப்பது வேதனையின் உச்சமே.

 

Karakattam


 

அந்த வீடியோக்களோடு, இனி ஆபாசமாக கரகாட்டம் ஆடும் ஆட்டக்காரர்களின் அனுமதியை ரத்து செய்யவேண்டும், தடைவிதிக்கவேண்டும் என  நாகை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்களின் நல சங்கத்தினர் தீர்மானம் கொண்டுவந்து, அதனை நாகை மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளரிடமும்  புகார் அளிப்பதற்காக தயாராகி வருகின்றனர்.
 

இது குறித்து கலைத்தாய் அறக்கட்டளையின் கிங்பைசலும், நாட்டுப்புற கலைஞர்களின் நலசங்க தலைவர்களில் ஒருவரான புத்தூர் ரவியும் கூறுகையில், "நையாண்டி மேளத்தின் இசைக்கு ஏற்ப உடம்பை வளைத்து தங்களின் அசைவுகளினால், தலையில் உள்ள கரகம் கீழே விழாமல் ஆடுவதுதான் கரகாட்டம். சங்க காலத்தில் சிலப்பதிகாரத்திலேயே அதைப்பற்றி இளங்கோவடிகள் எழுதியிருக்கின்றார். தமிழ் கடவுள்களை ஒவ்வொரு உருவத்தில் மக்கள் வழிபாடு செய்கிறார்கள். அதுபோல் அம்மனை வழிபாடு செய்யும்முறைதான் இந்த கரகம். ஆம். மாரியம்மன் கோவில்களில் தீமிதி திருவிழாவின்போது. மேலதாளத்துடன் ஆற்றங்கரைக்கு சென்று நீரை குடத்தில் எடுத்து வேப்பிள்ளை, பூக்களால் அந்தக் குடத்தை அலங்கரித்து பிறகு மஞ்சள், குங்குமம் வைத்து அதை அம்மனாக நினைத்து தலையில் சுமந்து வந்து தீ மிதித்து அந்த நீரை அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.


 

இது காலங்காலமான நடைமுறை. அதை கொஞ்சம் கொஞ்சமாக தலையில் வைத்து ஆடுவதற்கு பூசாரிகள் ஆண்களாகதான் இருக்க வேண்டும் என ஆணாதிக்கம் துவங்கியது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருப்பதால் ஆண்தான் கரகம் ஆடவேண்டும்  என்றனர்.
 

காலப்போக்கில்  அதை ஆடும் கலையாக மாற்றி நவதானியங்களை குடத்தில் வைத்து பக்கியோடு ஆடி வந்தார்கள். தற்பொழுது அதில் மண்ணை வைத்து ஆடுவதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. கிராமியக்கலையில் குறவஞ்சி என்னும் நடனத்தை ஆடுபவர்கள் குறவன், குறத்தி வேடமிட்டு நாட்டுப்புற பாடல்களைப் பாடி இலைமறைவு ஆபாசமாக பேசியும் ஆடியும் வந்தபொழுது பெண்கள் இந்த கரத்தை வைத்து ஆட ஆரம்பித்தார்கள். அப்போது புடவைகட்டி ஆடினார்கள், பிறகு சுருவால், பரத நாட்டிய ஆடை, மாராப்பு அனிந்து உடலை மறைத்து மரியாதையாக ஆடினார்கள். ஆனால் காலப்போக்கில் ஆபாசம் தலையெடுத்து இளைஞர்களையும் சிறுவர்களையும் ஏன் வயதானவர்களையும் கவரும் வகையில் ஆடைகளை அரைகுறையாக அணிந்து ஆடத்துவங்கினார்கள்.


 

கடந்த 15 ஆண்டுகளில் தஞ்சை, சேலம் போன்ற கலைஞர்கள் நிறைந்த ஊர்களில் புரோக்கர்கள் பெண்களை பணம் கொடுத்து அடிமைகளாக வைத்துக்கொண்டு இதுபோல் அறுவெறுக்கும் வகையில் கலையை ஆபாசமாக மாற்றிவிட்டனர். ஆடல் பாடலை தடைசெய்ததும் அதில் இருந்த பெண்களை இந்தக்கலையில் புகுத்தி ஆபாசமாக ஆடவிட்டு சம்பாதிக்கின்றார்கள். இதற்கு முழுகாரணம் புரோக்கர்களே. அவர்கள் மீதுதான் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 

பழம்பெறும் கரகாட்டகலைஞர்கள், மதுரை ஓம்பெரியசாமி, கும்பகோணம் அன்னியூர் சண்முகம், நாகை மாவட்டம் தலைஞாயிறு மாரிமுத்து, தஞ்சை தேன்மொழி, தமிழ்ச்செல்வி போன்றோர்கள் கரகாட்டத்தை தலைநிமிரச்செய்து பட்டங்களை பெற்றாலும், இதுபோன்று கலையை கெடுக்கும் கூட்டத்தால் அனைவருக்கும் தலைக்குனிவாகிறது.   பாரம்பரியத்தை பாதுகாக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என  நாகை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் சார்பாக முதற்கட்டமாக புகார் அளிக்க இருக்கிறோம்" என்கிறார்கள் ஆவேசத்துடன்.

 


 

சார்ந்த செய்திகள்