Skip to main content

'உடலில் கடப்பா கல்; வாயில் பாத்திரம் துலக்கும் ஸ்க்ரப்பர்'-நெல்லை தென்மண்டல ஐ.ஜி கண்ணன் பேட்டி

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
nn

 

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் 04.05.2024 அன்று சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் கொலையா தற்கொலையா எனப் பல்வேறு கட்டங்களில், பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு பல்வேறு தகவல்கள் செய்திகளாகவும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நெல்லையின் தென் மண்டல ஐ.ஜி கண்ணன் இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் ஐ.ஜி கண்ணன் பேசுகையில், ''வீட்டுக்கு பின்புறமே தேக்கு மரம் இருக்கக்கூடிய தோப்பில் அவருடைய சடலம் கருகிய நிலையில் கிடைத்தது. அந்த நேரத்தில் அந்தச் சடலத்தை எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு கொடுத்திருந்தோம். அவர் எழுதி வைத்திருந்த லெட்டர் அவற்றையெல்லாம் வைத்து முழுதாக இந்தச் சம்பவத்தை அந்த நேரத்தில் தற்கொலை என்று சொல்ல முடியவில்லை. அதனால் 'மேன் மிஸ்ஸிங்' கேஸை சந்தேக மரணம் என்ற வழக்கில் மாற்றி விசாரணை நடத்தி இருந்தோம். அவரது உடலை உடற்கூறாய்வு செய்த பொழுது முழுமையாக அவரது உடல் எரிந்து இருந்தது.

உடல் கறிக்கட்டையாக இருந்தது. முதுகு பக்கத்தில் எரியவில்லை, பின்னங்கால் பெரிய அளவில் எரியவில்லை. காலில் லூசாக கம்பி சுத்தப்பட்டு இருந்தது. உடலில் லூசாக கம்பி சுத்தப்பட்டு இருந்தது. உடலில் கடப்பா கல் என்று சொல்லும் ஸ்லாப் கல் 13 சென்டி மீட்டருக்கு 50 சென்டி மீட்டர் என்ற அளவில் முன் பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது. பாத்திரம் கழுவும் ஸ்க்ரப்பர் அவருடைய வாயில் இருந்தது. இதுதான் எங்களுக்கு கிடைத்த எவிடன்ஸ்.

கிடைத்த ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். இதற்காக பத்து தனிப்படைகளை உருவாக்கியிருக்கிறோம். ஒரு டிஎஸ்பி தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஒரு ஏ.டி.எஸ்.பி சூப்பர் வைஸ் பண்ணுகிறார். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இன்னும் வரவில்லை. இடைநிலை போஸ்ட்மார்ட்டம்  ரிப்போர்ட் வந்துள்ளது. இந்த விசாரணையில் அவர் கொடுத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 32 பேரையும் கூப்பிட்டு விசாரித்து அவர்களிடம் ஸ்டேட்மென்ட் வாங்கி உள்ளோம். அதை வைத்தும் புலனாய்வு செய்து கொண்டிருக்கிறோம். பல்வேறு விதமான அறிவியல் பூர்வமான ஆதாரங்களை சேகரித்து அது தொடர்பான விசாரணைகள் போய்க்கொண்டிருக்கிறது. கைரேகை நிபுணர்கள், சைபர் கிரைம் நிபுணர்கள் எனப் பலரும் இந்த விசாரணையில் இறங்கியுள்ளனர். முழுமையாக இன்னும் எங்களுடைய விசாரணை முடியவில்லை. டி.என்.ஏ டெஸ்ட் கொடுத்திருக்கிறோம். அதனுடைய முடிவுகள் எல்லாம் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதேபோல் உடற்கூறாய்வு ரிப்போர்ட் இன்னும் முழுமையாக வராமல் இருக்கிறது. மற்ற அனைத்து முறைகளிலும் இந்த விசாரணை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இதைவிட சிறப்பாக விசாரணை செய்ய முடியாது என்ற அளவுக்கு விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் இந்த வழக்கு சந்தேக மரணம் என்ற கேட்டகிரிலேயே வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம். கூடிய சீக்கிரத்தில் இந்த வழக்கில் முடிவு கிடைக்கும்''என்றார்.

சார்ந்த செய்திகள்