Skip to main content

5 வருடம் இருக்கும் உங்களுக்கு பென்ஷன், 58 வயது வரை இருக்கும் எங்களுக்குக் கிடையாதா?  

Published on 08/05/2018 | Edited on 08/05/2018

 

jacto geo


புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை தீர்த்து வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கூறி இருந்தனர்.

 

 

 

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழக வருவாயில் 70 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கு செலவிடப்படுகிறது என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் நிலைமையை புரிந்துகொண்டு போராட்டத்தைக் கைவிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

 

ஆனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். இதன்படி சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காகவே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நேற்று மாலையிலேயே அந்தந்த மாவட்டங்களில் திரண்டனர். ரெயில் மற்றும் பஸ்களில் புறப்பட்டு சென்னை வர திட்டமிட்டனர். இவர்களை பஸ், ரெயில் நிலையங்களில் வழிமறித்த போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இன்று வந்தவர்களையும் கைது செய்தனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சிலர் நம்மிடம் பேசும்போது,

 

"எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு சம்பளம் அண்டை மாநிலங்களிலிருந்து வாங்குகிறார்களா? 5 வருடம் எம்எல்ஏவாகவோ, எம்பியாகவோ உள்ள உங்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 58 வயது வரை அரசாங்கத்தில் பணியாற்றும் எங்களுக்கு ஓய்வூதியத்தில் பாரபட்சம் காட்டுவது ஏன்? எம்எல்ஏக்களின் சம்பளத்தை 50 ஆயிரம் உயர்த்திவிட்டு எங்களுக்கு முரண்பாடான ஊதிய உயர்வா? நிலுவைத் தொகையை நீங்கள் பெற்றுள்ளீர்களே, அதனை பொதுமக்களுக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும்.

 

தலைமைச் செயலாளருக்கும் நிதித்துறை செயலாளருக்கும் 30% எச்.ஆர்.ஏ. (வீட்டு வாடகை அலவன்ஸ்) அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அமைச்சர் பெருமக்கள் அறிக்கையாய் தருவார்களா? ஓய்வூதியம் தருகிறோம் என்று கூறி மாதம் தோறும் 10% ஊதியத்தில் பிடித்தம் செய்து விட்டு, ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியம் கேட்கமாட்டேன் என்று எழுதி கொடுத்தால்தான் பிடித்த தொகையை திரும்பத் தருவேன் என்று ஏமாற்றும் மோசடிக்காரர்களை எந்த சிறையில் அடைக்கப்போகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்கள்.

 

சார்ந்த செய்திகள்