Skip to main content

நடப்பது மக்களாட்சியா? மன்னராட்சியா? நடப்பது சனநாயகமா? சர்வாதிகாரமா? - சீமான் கண்டனம்

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
so

 

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பயணம் செய்த விமானத்தில் பாஜக-விற்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இருக்கையில் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்து விமானத்தில் முழக்கமிட்ட சோபியா என்ற பெண் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை தருகிறது.

 

பாஜகவை எதிர்த்து முழக்கமிட்ட ஒரே காரணத்தினால் கைது செய்யப்பட்டிருப்பது என்பது இந்த நாடு காலம் காலமாய் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக கொண்டிருக்கிற கருத்துரிமையின் மீது நிகழ்த்தப்பட்டு இருக்கிற கொடும் தாக்குதலாக கருதுகிறேன். முழக்கமிட்டால் கைதா? நடப்பது மக்களாட்சியா? மன்னராட்சியா? இங்கு நடப்பது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்று கேள்வி எழுகிறது.

 

சகிப்புத்தன்மையற்ற ,எதிர் கருத்து எதுவும் தோன்றி விடக்கூடாது என்பதான ஏதோச்சதிகார உளவியல் என்பது பாஜக கட்சியின் அடிப்படை குணாதிசயங்களாக மாறி இருக்கின்றன என்பதற்கு இந்த கைது நடவடிக்கை ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தொடர்ச்சியாக மக்களை ஆண்டு கொண்டிருக்கின்ற பாஜக அரசின் எதிர்க்கருத்து கொண்டோரை எல்லாம் எப்படியாவது ஒடுக்க முயற்சிப்பது என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது ‌.

 

தொடர்ச்சியாக தமிழகத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு இருக்கின்ற மக்கள் நல எதிர்ப்பு திட்டங்களால் தமிழின இளையோர் மிகுந்த வெறுப்பு அடைந்திருக்கிறார்கள் என்பதை தான் இந்த சம்பவம் வெளிக்காட்டுகிறது. கருத்தை கருத்தால் எதிர்கொண்டு அனுப்பி இருக்க வேண்டிய ஒரு இளம்பெண்ணை எதிர்த்து முழக்கமிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்திருப்பது என்பது தேவையற்ற கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தக் கைது நடவடிக்கைக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கைது செய்யப்பட்டிருக்கிற மாணவி சோபியாவை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.’’

 

சார்ந்த செய்திகள்