Skip to main content

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்