Skip to main content

“மாட்டுக்கறி சாப்பிடுவியா நீ..” - இஸ்லாமிய மாணவியை டார்ச்சர் செய்த ஆசிரியர்கள்

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

islam student torchered by teacher for beef in covai

 

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர்  ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் நேற்று கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் தனது பெற்றோருடன் வந்து பள்ளி ஆசிரியை அபிநயா மீதும், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மீதும் புகார் மனு ஒன்றை அளித்தார்.

 

அவர் அளித்த அந்த மனுவில், ‘பள்ளி ஆசிரியை அபிநயா, அந்த மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் முறையிட்டுள்ளார்கள். அப்போது, இது குறித்து அவரிடம் இருந்து முறையான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியை அபிநயா என்பவரும், ஆசிரியர் ராஜ்குமார் என்பவரும், தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் முறையிட்டது குறித்து மாணவியிடம் கேள்விகள் கேட்டு, கன்னத்தில் அறைந்து மாட்டுக்கறி சாப்பிடுவியா நீ, அப்ப உனக்கு திமிர் அதிகமாகத் தான் இருக்கும் எனக் கூறி சக மாணவிகள் மத்தியில் மாணவி அணிந்திருந்த புர்கா மூலம் அனைவரின் ஷூவை துடைக்க வைத்து துன்புறுத்தியுள்ளனர். ஆகையால், மாணவியின் படிப்புக்கு இந்த ஆசிரியர்களால் பாதிப்பு இருக்கும் என்ற அச்சம் இருப்பதாக கூறி’ தனது புகாரில் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கூறியதாவது, “இங்கு தொடர்ந்து எனது குழந்தையிடம் மாட்டுக்கறி சாப்பிடுவியா? அப்ப திமிர் பிடித்த மாதிரி தான் நடந்து கொள்வீர்கள் என தொடர்ந்து கேள்விகள் எழுப்பி ஆசிரியர்கள் டார்ச்சர் செய்திருக்கின்றனர். இது சம்பந்தமாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த போது, அவரிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. இருப்பினும், மீண்டும் இரண்டாவது முறையாக தலைமை ஆசிரியரிடம் அணுகிய போதும் கூட அப்பொழுதும் சரியான பதில் இல்லை. அதன் பின், காவல்துறையினரிடம் இது குறித்து புகார் அளித்த போது எங்களை சமாதானப்படுத்தி, இது போல் மீண்டும் நடக்காது என்றும் மீண்டும் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புமாறும் கூறினர்.

 

அதன் பேரில், மீண்டும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பிய போதும் அதே மாதிரியான டார்ச்சர்களை அந்த ஆசிரியர்கள் செய்திருக்கின்றனர். இந்த நிலையில், தான் இந்த விவகாரத்தில் நியாயம் வேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்திருக்கிறோம்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து,  பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்