Skip to main content

தமிழகத்திலும் அதிகரிக்கும் தெருநாய்க் கடி சம்பவங்கள்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

அண்மையில் சென்னையில் தெருநாய் கடித்து 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஈரோட்டிலும் சிவகங்கையில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் தெரு நாய்கள் குழந்தைகளை கடிப்பது, சாலையில் செல்வோரை கடிப்பது தொடர்பான செய்திகளும், வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அண்மையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவொற்றியூரின் பரபரப்பான சாலை ஒன்றில் 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை தெரு நாய் கடித்துக் குதறியது. அந்த தெருநாயை அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்தே கொலை செய்தனர்.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சம்புளியம்பட்டி பகுதியில் வீட்டில் புகுந்த நாய் ஒன்று 65 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடித்துக் குதறியது. பின்னர் வெளியே வந்த அந்த நாய், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறியது. இதில் பாதிக்கப்பட்ட 65 வயது பெண் உட்பட ஏழு பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிவகங்கையில் காரைக்குடி கல்லூரி சாலையில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் பெண் உட்பட ஐந்து பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெரு நாய்க் கடி காரணமாக பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்